பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

ஒழுக வேண்டும் என்றும், அவர் மிகுந்த விருப்பங்கொண்டு, அந்தக் கோரிக்கை பரிபூர்ணமாக நிறைவேறுவதற்குத் தாம் எவ்விதமான உபாயம் தேடலாமென்று யோசித்து யோசித்துப் பார்த்து, முடிவில் அது விஷயமாக டில்லியிலுள்ள இராஜப் பிரதி நிதியுடன் கடிதப் போக்குவரத்து செய்தார். இராஜப் பிரதிநிதியின் கீழ் மாதா மாதம் 3000 ரூபாய் சம்பளம் வாங்குகிறவரும், சட்டங்களையும் இராஜாங்க நிர்வாக முறைகளையும் முற்றிலும் கரை கண்ட அதிமேதாவியுமான ஒருவர் இருக்கிறார் என்றும், அவருக்கு மாதம் 5000 ரூபாய் சம்பளமும் சர்வ அதிகாரமும் கொடுத்து அவரை திவானாக வைத்துக்கொண்டால், அவர் பழைய காலத்து ஊழல்களை எல்லாம் அடியோடு வேரறுத்து, நவீன முறைகளை எல்லாத் துறைகளிலும் ஸ்தாபித்து, அந்த சமஸ்தானத்திற்குப் புத்துயிர் கொடுத்து, அது இந்திய தேசத்திற்கே நடுநாயகமாய் விளங்கும்படி செய்து விடுவார் என்று இங்கிலீஷ் இராஜப் பிரதிநிதி யுக்தி கூற, சுதேச மன்னர் அதை ஏற்றுக்கொண்டு, உடனே அந்த உத்தியோகஸ்தரை திவானாக நியமித்து, அவரைத் தமது பட்டணத்திற்கு வருவித்துத் தமக்கிருந்த இரண்டு அரண்மனைகளுள் ஒன்றை ஒழித்து அவருடைய குடும்ப வாசத்திற்கு அதைக்கொடுத்து, அவருக்குரிய ஆள் மாகாணங்கள் எல்லோரையும் நியமித்துக் கொடுத்து, அவருக்குத் தேவையான சகல செளகரியங்களையும் முஸ்தீபுகளையும் செய்து கொடுத்துத் தமது அதிகாரம் முழுதையும் அவர் சுயேச்சையாகச் செலுத்தலாம் என்று அனுமதி அளித்துவிட்டார்.

புதிய திவான் வந்தபிறகு, சொற்ப காலத்திற்குள், அவர் தமது சட்ட ஞானத்தை எல்லாம் பூர்த்தியாகக் காட்டத் தொடங்கியதோடு, தமக்குக் கீழ்ப்பட்ட எந்த அதிகாரியானாலும் சட்டத்திற்கு ஒர் இம்மியளவு தவறாக நடப்பானானால், அவனை உடனே வேலையிலிருந்து தகையர் செய்யலானார். அரசனது அரண்மனையின் செலவைக் குறைக்க வேண்டுமென்ற கருத்தோடு அவர் அங்கிருந்த சிப்பந்திகளுள் பெரும்பாலோரை விலக்கினார்; பழைய காலத்துக் கட்டிடங்களை எல்லாம் இடித்துத் தரை மட்டமாக்கிப் புதிய கட்டிடங்களை எழுப்பி நகரத்தைப் புதுப்-

18