பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

பெருத்த அக்கிரமம் செய்துவிட்டது உண்மையாக இருந்தும், அதற்கு எவ்விதமான பரிகாரமும் இல்லாமல் போனதைக் குறித்துத் தான் அந்த ஊர் மகாராஜனிடமாகிலும் முறையிட்டுக்கொண்டு, தனது குடும்பத்தின் பரிதாபகரமான நிலைமையைத் தெரிவித்துத் தனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் அவனது மனத்தில் தோன்றியது. உடனே அவன் அந்த அரண்மனை வாசலை அடைந்து, அவ்விடத்திலிருந்த பாராக்காரனைக் கண்டு, தான் ஓர் அவசர காரியமாக மகாராஜனைப் பார்க்கவேண்டுமென்று கூறி, தனக்கு அரசனது பேட்டி செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டான். பாராக்காரன், "அப்பா! நம்முடைய ஊர் மகாராஜனை நம்மைப்போன்ற ஏழை மனிதர்கள் எல்லோரும் பார்ப்பது சாத்தியமான காரியமா? தக்க பிரபுக்கள் மாத்திரம் ஏதாவது முக்கியமான காரியமிருந்தால், தன்னைப் பார்க்க மகாராஜன் இணங்குவார். மற்றவர்கள் அவரைக் பார்க்க வேண்டுமானால் திவானுடைய அநுமதியைப் பெற்றுக் கொண்டு வந்தாலன்றி, உள்ளே விடக்கூடாதென்று கண்டிப்பான ஆக்கினை பிறந்திருக்கிறது. ஆகையால், நீ மகாராஜனைப் பார்க்க ஆசைப்படுவது பலியாத எண்ணம். அவசியம் பார்க்கத்தான் வேண்டுமென்றால், நீ உடனே திவானிடம் போய் மனுக்கொடுத்து அவருடைய உத்தரவைப் பெற்றுக் கொண்டு வா" என்றான்.

அதைக் கேட்ட சமயற்காரன், தான் திவானிடம் போய், அநுமதி கேட்டால், அவர் கொடுக்க மறுத்துவிடுவார் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. ஆகையால், திவானிடம் தான் போவது. வீணான வேலையென்று தீர்மானித்ததன்றி, தான் சொல்லிக் கொள்ள வேண்டிய விஷயங்களை ஒரு காகிதத்தில் எழுதி, அதை அந்தப் பாராக்காரனிடம் கொடுத்து அரசனிடம் கொடுக்கச் செய்தான். அதைப் படித்துப் பார்த்த அரசன், திவான் செய்த தீர்மானமே நியாயமானதென்று அதன்மேல் எழுதியனுப்பி விட்டான். -

அதைப் படித்துப் பார்த்த நமது சமயற்காரன் மிகுந்த வியப்பும், கோபமும் அடைந்து “ஆகா! என்ன ராஜ்யம் இது என்ன அரசன்! என்ன நீதி கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டைவிடக் கடும் புலி வாழும் காடு நன்று என்று சொல்வது சரியாய்ப் போய்

36