பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

ஆத்திரத்தோடு கேட்க, குழந்தை "என்ன அப்பா நீங்களே சாமான்களை அனுப்பிவிட்டு, ஒன்றையும் அறியாதவர்களைப் போலப் பேசுகிறீர்களே! யாரோ ஒருவர் சேவகனைப்போல உடை தரித்திருந்தார். இவர் இந்த ஊர்த் திவானுடைய வீட்டு வாசலில் இருக்கும் பாராக்காரராம். அவரும் அவருடைய சம்சாரமும் நேற்று இரவு சுமார் எட்டுமணி சமயத்தில் வந்தார்கள்; வரும்போது சுமார் நான்கு படி அளவுள்ள அரிசி, அதற்குத் தகுந்த பருப்பு, உப்பு, புளி, மிளகாய், தயிர், நெய், எண்ணெய், இலை, விறகு முதலிய சகலமான சாமான்களையும் கொணர்ந்து அவைகளை நீங்கள் கொடுத்ததாகவும், சமயல் செய்து சாப்பிடும்படி நீங்கள் சொல்லச் சொன்னதாகவும், நீங்கள் எங்கேயோ அவசரக் காரியமாய்ப் போயிருப்பதாகவும், அதைப் பார்த்துக்கொண்டு வருவீர்களென்றும் சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். அதை நாங்கள் உண்மை என்றல்லவா எண்ணிக்கொண்டிருக்கிறோம்" என்றது. அந்த வரலாற்றைக் கேட்ட நமது சமயற்காரனுக்கு உடனே உண்மை விளங்கிவிட்டது. முதல்நாள் இரவில் தனக்கு 8 அணா இனாம் கொடுக்க எத்தனித்த சேவகனே தன் குடும்பத்தின் பரிதாபகரமான நிலைமையை உணர்ந்து அவ்வாறு தந்திரமாக உதவி செய்து காப்பாற்றி இருக்கிறான் என்று நினைத்து “ஆகா மனிதர் இருந்தால் இப்படியல்லவா இருக்க வேண்டும்! ஜீவகாருண்யம் என்பது முக்கியமாய்க் கஷ்டங்களை அநுபவிப்பவரிடமே காணப்படுகிறது. பசியாகவும் பட்டினியாகவும் இருந்தவரே அவற்றின் கொடுமையை எளிதில் உணர்ந்து இரக்கங் கொள்கிறார்கள். தாம் எவ்வித கஷ்டமும் துன்பமும் அநுபவியாமல் எப்போதும் செல்வத்திலும் சுகத்திலும் செல்வாக்கிலும் இருப்பவர் மற்ற எல்லோரும் அதே நிலைமையில் இருப்பதாக எண்ணிக் கொள்ளுகிறார்கள். அதுவுமன்றி, ஏழைகளின் தீனக்குரல் அவர்களுடைய மனசில் உண்மை என்றே படுகிறதில்லை. அவர்கள் சோம்பேறிகளாக இருந்து, மற்றவர்களுடைய பொருளை அபகரித்துத் தின்னவே பலவிதமான வேஷம் போடுகிறார்கள் என்றே எண்ணுகிறார்கள். என்னுடைய குடும்ப நிலைமையை நான் திவானிடத்திலும் வெளியிட்டேன்; அரசனிடத்திலும் வெளியிட்டேன்; அந்த எளிய பாராக்காரனிடத்திலும் வெளியிட்டேன்.

39