பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

அரண்மனை வேலைக்காரர்கள் தண்ணிர் எடுத்தால், அது திவானுடைய உத்தரவு என்றும் தெரிவித்து, அவர்களிடம் அந்த வரியைக் கண்டிப்பாய் வசூலிக்கும்படி ஏற்பாடு செய்து விட்டார். அரசன், திவான், மற்ற உத்தியோகஸ்தர்கள் முதலிய எல்லோருடைய ஜாகையிலிருந்தும் வரும் குடங்களுடன் ஒவ்வொரு பிடி தானியம் வந்து சேர ஆரம்பித்தது. அது ஒவ்வொரு மாதத்திலும் மலைபோலக் குவியத்தொடங்கியது. இந்த வரி விதிக்கப்பட்டிருந்த விஷயம் முறையே அரசனுக்கும், திவானுக்கும் எட்டியதானாலும், அரசன், அது திவானுடைய உத்தரவென்றும், திவான், அது அரசனுடைய உத்தரவென்றும் நினைத்து, அதைப்பற்றி எவ் விதமான பிரஸ்தாபமும் செய்யாமல் இருந்து விட்டதன்றி, சர்க்கார் உத்தரவிற்கு எல்லோரும் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதற்குத் தாமே உதாரணமாக நடந்து காட்டவேண்டுமென்று நினைத்து, அந்த உத்தரவின்படி ஒரு குடத்திற்கு ஒரு பிடி அரிசி கொடுத்துவிடும்படி தமது சமயல்காரருக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து விட்டார்கள். அந்த அரிசி மறுபடி அரண்மனைக்குத் தானே வரப்போகின்றதென்று நினைத்து, பரிசாரகர்கள் குடம் ஒன்றுக்கு இரண்டு பிடி அரிசி கொடுத்துவிட்டுப் போயினர். அதைக் கண்ட மற்ற ஜனங்களும் உற்சாகமும் குதூகலமும் அடைந்து தாங்களும் அது போலவே ஒன்றுக்கிரண்டு மடங்காய்த் தானிய வரி செலுத்தலாயினர்.

இவ்வாறு அந்த நகரத்தில் நமது திவான் லொடபட சிங் பகதூர் நூற்று முப்பது வகையான வரிகளும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இலாகாவும் ஸ்தாபித்து ஆயிரக்கணக்கில் குமாஸ்தாக்களையும் தாசில்தாரையும் நியமித்து வரி வசூல் செய்து கொண்டே போனார். அவ்வூரிலிருந்த மகாராஜன் திவான் முதல் தோட்டிவரையிலுள்ள சகலமான ஜனங்களையும் திவான் லொட பட சிங் பகதூரின் வரி ஒரு பின்னல் போல வளைத்துப் பின்னி அந்த வலைக்கு உட்படுத்தி விட்டது. எவரும் அதன் மூல காரணத்தை விசாரிக்காமலும், அதைப்பற்றி எவ்வித பிரஸ்தாபமும் செய்யாமலும் வரிகளைச் செலுத்தி வந்தனர். நமது திவான் லொடபட சிங் பகதூர் எப்போதும் போல பகல் வேளையில் திவானுடைய வண்டியில் உட்கார்ந்து போவதையும் கதவைத்

48