பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திவான் லொடபட சிங் பகதூர்

வசூலிக்கும் இடமாக இருக்கலாமென்று அரசன் நினைத்துக் கொண்டு, யாரோ ஒரு சாதாரண வழிப்போக்கனைப் போல அந்தச் சேவகர்களிடத்தில் உலோகாபிராமமாய்ப் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க, அப்போது அந்தப் பாதையின் வழியாகச் சில ஏழைக் குடியானவர்கள் சுடுகாட்டிற்குக் கொண்டுபோகும் பொருட்டு ஒரு பிரேதத்தைப் பாடையில் வைத்துத் தோளின்மீது தூக்கிக்கொண்டு, "ஜேராம் ஜே ஜே ராம் சீதாபதே ராம் மாதா பிதாராம்!" என்று பலவாறு முறை வைத்துக் கூச்சலிட்டுக் கொண்டு வந்து சுங்கன் சாவடியைக் கடந்து அப்பால் செல்ல யத் தனிக்க, அங்கிருந்த சேவகர்கள் இருவரும், "அடேய்! நிறுத்துங்கள். எங்கே வரிப்பணம்? ஏது நீங்கள் ஒன்றையும் அறியாதவர்போல மெதுவாய் நழுவுகிறீர்கள்?" என்று அதட்டிக்கொண்டு சாவடியை விட்டு எழுந்தோடி பிணத்தைக் தூக்கிக்கொண்டு போனவர்களுக்கு எதிரில் போய் நின்று, வழிமறித்து அவர்களை மிரட்ட ஆரம்பித்தனர்.

பிணத்தை எடுத்துச் சென்றவர்கள் நடு நடுங்கி அப்படியே நின்று விட்டார்கள். அவர்களுக்குள் முக்கியஸ்தனாக இருந்த ஒருவன் துணிவாகப் பேசத்தொடங்கி, "ஐயா! இது அநாதைப் பிணம். ஊரிலுள்ள திருக்குளத்தின் பக்கத்தில் ஒரு பாழும் சாவடி இருக்கிறது. அதில் இந்த பிச்சைக்காரன் செத்துக் கிடந்தான். இவனுக்குச் சொந்தக்காரர் யாருமில்லை. இந்தப் பிணம் குளத்திற்குப் பக்கத்தில் இருந்ததாகையால், பெண் பிள்ளைகள் குளிப்பதற்குப் போகப் பயந்தார்கள்: அதுவுமன்றி, இந்தப் பிணம் அழுகிப்போய் நாற்றத்தைப் பரப்பினால் அங்கு வரும் ஏராளமான ஜனங்களுக்கு அது துன்பகரமாக இருப்பதோடு, வியாதியை உண்டாக்கும் என்று நினைத்து நாங்கள் பொதுஜன நன்மையைக் கருதி மூங்கில், கயிறு முதலிய சாமான்களை யாசகம் வாங்கிப் பாடை கட்டி, இந்தப் பிணத்தைச் சுடுகாட்டிற்குக் கெண்டுபோய் புதைக்கப் போகிறோம். எங்களிடம் பணமும் கிடையாது. நாங்கள் இந்தப் பிணத்திற்காக வரிசெலுத்தவும் கடமைப்பட்டவர்களன்று' என்றான்.

அதைக்கேட்ட சேவகன் ஒருவன் “அந்த நியாயமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இந்த வழியாகச் சுடுகாட்டிற்கு யாராவது

50