பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

இருந்தன. அதுவுமன்றி, அநாதைப் பிணத்தை எடுத்து வந்த மனிதர்கள் "இந்த ஊர் அரசன் பிச்சைக்காரப் பிணத்தின் வாயிலுள்ள அரிசியைக்கூடத் தோண்டி எடுப்பவன்" என்றதும், பிணத்தை அரண்மனை வாசலில் கொணர்ந்து போடுவதாகவும், பொக்கிஷ அறையில் அடமானம் வைப்பதாகவும் அவர்கள் சொன்னதும், கூர்மையான ஆயிரம் ஈட்டிகளைக் கொண்டு குத்துவதுபோல மகாராஜனது மனத்தைப் புண்படுத்தி, அவமானத்தினால் அவனது தேகம் குன்றிப்போகும்படி செய்தது. அத்தகைய இழிவையும் தூஷணையையும் தனக்கு உண்டாக்கி வைத்த மூட திவானைத் தான் தக்கபடி சிட்சிக்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தெழுந்து மேலாடி நின்றது. அவ்விதமான நிலைமையில் அரசன் இந்த இரவு முழுவதும் தூங்காமல் இருந்து, மறுநாட் காலையில் எழுந்து, தனது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு தனது ஆஸ்தான மண்டபத்தில் அமர்ந்து திவானினது வருகையை நிரம்பவும் ஆவலோடு எதிர்பாத்திருந்தான்.

அவனது திவானுக்கும் அந்த இரவு மிகவும் துன்பகரமானதாகவே முடிந்தது. அரசன் எந்த விஷயத்தைப்பற்றி அவசரமாகத் தம்மிடம் பேச எண்ணுகிறார் என்பதைப்பற்றி அளவற்ற ஆவல் கொண்டு எண்ணிக்கையற்ற யூகங்களும் யோசனைகளும் செய்து எதையும் குறிப்பாக நிச்சயிக்க மாட்டாதவராய் இரவு முழுதும் சலனப்பட்டவராகவே இருந்து, மறுநாட் காலையில் எழுந்து, தமது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு அரசனுக்கு எதிரில் வந்து ஆஜராய் அவனை வணங்கினார்.

அதற்குமுன் அரசன் திவானுக்குக் காட்டிய மரியாதையையும் அன்பையும் காட்டாமல், ஆசனமும் கொடாமல் அப்படியே நிற்க வைத்துப் பேசவே, திவானுக்கு அது முற்றிலும் விபரிதமாகத் தோன்றியதன்றி, அவரது மனத்தில் ஒருவிதமான கலக்கத்தையும் சஞ்சலத்தையும் உண்டாக்கியது. தாம் ஏதேனும் தவறு செய்து விட்டதாக எவரேனும் அரசனிடம் விண்ணப்பம் செய்து கொண்டிருப்பதனால்தான் அரசன் தம்மை அவ்வாறு அருவருப் போடும் அவமரியாதையாகவும் நடத்துகிறார் என்று நிச்சயித்துக் கொண்டு, அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று அவனது சமூகத்தை எதிர்பார்த்தவராயிருக்க, மகாராஜன் திவானை

56