பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

அதைக் கேட்ட மகாராஜன், "நீங்கள் சொல்வது நிச்சயந்தானா? உங்களுக்கு வேண்டுமானால், அவகாசம் கொடுக்கிறேன். நீங்கள் போய் உங்களுக்குக் கீழே இருக்கும் சிப்பந்திகள் என்னென்ன வரிகள் விதித்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டு நன்றாகத் தெரிந்து கொண்டு வந்து, அதன்பிறகு என் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்" என்றான்.

திவான் "மகாராஜா! இந்த நகரத்தில் இன்னின்ன வரிகள் போடப்படுகின்றன என்பது எனக்கு மனப்பாடமாகத் தெரியும். வரி விதித்து வசூலிக்கும் இலாகாவை நானே நேரில் அதிக ஜாக்கிரதையோடு பார்த்து வருகிறேன். ஆகையால், நான் சொன்னதில் சந்தேகமே இல்லை. நம்முடைய ராஜ்ஜியத்தில் இறந்து போகிற மனிதர்களுக்கு, அதாவது பிணங்களுக்கு வரி விதிக்கப்படுவதே இல்லை. அப்படிப்பட்ட பரம அசம்பாவித மான காரியம் எதுவும் நான் இருக்கும் வரையில் தங்களுடைய நகரத்தில் நடக்காது என்பதைத் தாங்கள் நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம்” என்று அழுத்தமாகக் கூறினார்.

அரசன் : (புரளியாகப் புன்னகை செய்து) ஐயா! நம்முடைய ஊருக்கு வடக்கில் இருக்கும் சுடுகாட்டுக்குப் போகும் வழி யோடு நீங்கள் எப்போதாவது போனதுண்டா?

திவான் : நான் போனதில்லை. -

அரசன் : அந்தப் பாதையில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் ஒரு சுங்கன் சாவடி கட்டப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு சேவகர்கள் இருக்கிறார்கள். சுடுகாட்டுக்குப் போகும் ஒவ்வொரு பிணத்திற்கும் ஒரு பணம் வரி கொடுக்காவிட்டால், பிணத்தை விடக்கூடாது என்று திவானுடைய உத்தரவு ஆயிருக்கிறதாம். அவர்கள் அதுபோலவே ஏழெட்டு வருஷகாலமாக வரி வசூலித்து வருகிறார்களாம்.

திவான்: (அடக்க இயலாத வியப்படைந்து) ஒரு நாளும் அப்படி இராது. நான் இங்கே திவானாக வந்து பத்து வருஷ காலமாகிறது. அப்படிப்பட்ட ஏற்பாடு செய்திருந்தால் நான்தானே அதைச் செய்திருக்க வேண்டும். நான் நிச்சயமாகத் துணிந்து சொல்லுவேன். அது தப்பான சங்கதி - என்றார்.

58