பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

மகாராஜன் "இதோ இந்த ரசீதைப் பார்த்துச் சொல்லுங்கள்" என்று தாம் வாங்கி வந்த இரசீதைக் கொடுக்க, அதை ஆவலோடு வாங்கிப் பார்த்த திவான் பிரமித்து அப்படியே ஸ்தம்பித்துப் போய் "என்ன ஆச்சரியம் இது? யாரோ மறைவிலிருந்து இவ்வித மான மோசத்தை நடத்துகிறார்கள் போலிருக்கிறது. நான் உறுதி யாகச் சொல்லுகிறேன். இது என்னால் அநுமதிக்கப்பட்ட காரியமே அல்ல. அதுவுமன்றி, இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. இந்த ரசீதில் காணப்படும் திவான் லொடபட சிங் பகதூர் என்ற முத்திரை தாங்கள் எப்போதும் எல்லா தஸ்தாவேஜிகளுக்கும் வைத்தனுப்பும் தங்களுடைய பிரியமான முத்திரையல்லவா? இதை அந்த மோசக்காரன் அப கரித்து இந்த ரசீதுக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறானே" என்றார்.

மகாராஜன் வியப்பும், கோபமும் அடைந்து "என்ன திவானே! இந்த முத்திரையை நான் பிரியமாக வைத்துக்கொண்டு எல்லா தஸ்தாவேஜிகளுக்கு உபயோகிப்பதாக உங்களுக்கு யார் சொன்னது? என்னிடம் மகாராஜன் என்ற முத்திரை இல்லாமல் போய்விட்டதா? உங்களிடத்திலிருந்து வரும் தஸ்தாவேஜிகளில் இந்த முத்திரை இருந்ததைப் பார்த்து, நீங்கள் இந்தப் பழைய காலத்து முத்திரையைப் பிரியமாக வைத்து உபயோகிக்கிறீர்கள் என்றல்லவா நான் இதுவரையில் நினைத்திருந்தேன். நீங்கள் சொல்வது ஆச்சரியகரமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறதே!” என்றான்.

திவான் "எனக்கும் அப்படியேதான் இருக்கிறது. இருக்கட்டும். யாரோ சேவகர்கள் சுடுகாட்டிற்குப் பக்கத்தில் இருந்து இந்த ரசீதைக் கொடுத்ததாகத் தங்களுக்குச் செய்தி வந்திருக்கிறதல்லவா. அந்தச் சேவகர்களை உடனே வரவழைத்து விசாரிப்போம். இவ்வித ரசீதுகள் அடங்கிய புஸ்தகங்களை அவர்களுக்கு யார் கொடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் வசூலிக்கும் பணத்தை யாரிடம் செலுத்துகிறார்கள் என்பதையும், அவர்களுடைய சம்பளத்தை அவர்களுக்கு யார் கொடுக்கிறார்கள் என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதிலிருந்து உண்மையைக் கண்டு பிடிக்கலாம்' என்று கூறி அருகிலிருந்த சேவகர்களுள் ஒருவனை

59