பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

இருந்து காலந்தள்ளப் போகிறோம் என்ற பயம் தோன்றி எங்கள் மனசை வதைப்பதால், நான் துணிந்து இந்த விண்ணப்பத்தைத் தங்களிடம் செய்து கொள்ளுகிறேன்" என்றான்.

எவரும் எதிர்பாராவிதம் அவன் நிரம்புவம் துணிவாகப் பேசியதைக் கேட்ட அரசனும், திவானும், மற்ற ஜனங்களும் முற்றிலும் திகைத்து பிரமித்து ஸ்தம்பித்துப் போயினார். திவான் தனது சிறுமையையும் அறியாமையையும் உணர்ந்து வெட்கிக் குன்றித் தலைகுனிந்து நின்றார். அதுபோலவே மகாராஜனும் ஒரு விதமான கிலேசத்தையும் இழிவையும் உணர்ந்து தனது மனத்தில் பொங்கியெழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அந்த மனிதனைப் பார்த்து, "ஐயா! நீர் பேசுவதைப் பார்த்தால், இந்த திவான் சில வழக்குகளில் நீதித் தவறாக நடந்துகொண்டதை நீர் அறிந்து கொண்டு பேசுகிறது போலத் தோன்றுகிறதே" என்றான்.

அந்த மனிதன், "ஆம்; சுமார் பத்து வருஷங்களுக்கு முன் நான் ஒரு தாசில்தாரிடம் சமயல்காரனாக இருந்தேன். இந்த திவான் வேலைக்கு வந்தவுடன் அந்தத் தாசில்தாரையும் வேறு பலரையும் உத்தியோகத்திலிருந்து விலக்கிவிட்டார். அதனால் என்னுடைய சமயல் உத்தியோகமும் போய்விட்டது. நான் நாணயமான வழியில் ஜீவனம் செய்ய வேண்டுமென்று இவ்வளவு பெரிய பட்டணத்தில் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. என் பெண்சாதி வியாதியால்பட்டு மருந்துக்கும் கஞ்சிக்கும் வகையின்றி படுத்த படுக்கையாகக் கிடந்தாள். சிறிய குழந்தைகள் பசியால் துடித்துப் பறந்தன என்றான்.

உடனே திவான் நமது சமயற்காரனை நோக்கி, "ஓகோ! நீயா! உன்னுடைய வழக்கு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! நீ மைசூர்பாகு செய்து விற்றபோது யாரோ சூதாடிகள் வந்து எல்லா வற்றையும் அபகரித்துக்கொண்டு போனதாக நீ பிராது கொடுத்தாய். சாட்சிகள் இல்லை. ஆகையால், அந்த வழக்கை நான் தள்ளி விட்டேன்" என்றார்.

நமது சமயற்காரன் சிரித்துக்கொண்டு "ஆம். ஆம். அந்த மனிதன் நான்தான். தாங்கள் என் வழக்கைத் தள்ளிய பிறகு நான்

76