பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

மகாராஜனிடம் நேரில் வந்து என் நியாயத்தைச் சொல்லிக் கொள்ள எத்தனித்தேன். மகாராஜன் பெரிய மனிதர்களுக்குத் தான் பேட்டி கொடுப்பதென்றும், என்னைப்போன்ற அற்ப மனிதர்களை அருகில் வரவிடுவதில்லை என்றும் சேவகர்கள் சொல்லி விட்டார்கள். அதன் பிறகு என் வழக்கைக் காகிதத்தில் எழுதி நான் அதை மகாராஜனுக்கு அனுப்பினேன். திவான் செய்ததே சரியான தீர்மானமென்று சொல்லி நம் அரசர் என்னுடைய மனுவைத் தள்ளி விட்டார். என்னுடைய குடும்பத்தின் பரிதாபகரமான நிலைமையையும், அந்தக் கொள்ளையினால், எனக்கு நேரக்கூடிய பலாபலன்களையும் நான் திவானிடத்திலும், மகா ராஜனிடத்திலும் தெரிவித்தேனானாலும், அவர்களுடைய மனம் சட்டமொன்றையே கவனித்ததன்றி ஜீவகாருண்யம் என்பதை எள்ளளவும் கொள்ளவில்லை. ஒரு தகப்பன் செயலற்றவையாயிருக்கும் தன் சொந்தக் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவானோ அதுபோல, மகாராஜன் குடிகளைக் காப்பாற்ற வேண்டு மென்பது நம்முடைய முன்னோர் கடைப் பிடித்துவந்த கொள்கை. ஒரு குழந்தை, "பட்டினி கிடந்து சாகிறே"னென்றால், அதன் தகப்பனுடைய மனம் இரங்காமலிருக்குமா? என்னுடைய வரலாற்றைக் கேட்டுக் கல்லும் கரைந்துருகும். அப்படி இருந்தும், தங்கள் இருவருக்கும் மனம் கொஞ்சமும் இரங்கவில்லை. இந்த திவானுடைய வீட்டுவாசலில் இருந்த பாராக்காரனுடைய மனம் உடனே இளகித் தவித்தது. அவன் எனக்கு உடனே எட்டணா பணத்தைக் கொடுக்க வந்தான். நான் நியாயமான வழியில் சம்பாதிக்க வேண்டுமென்றும், பிறருடைய பொருளை உழைப்பின்றி அபகரிக்கக் கூடாதென்றும் சொல்லி அதை வாங்க மறுத்து விட்டேன். அவன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஏராளமான சாமன்களை எடுத்துக்கொண்டு எனக்குத் தெரியாமல் போய் என் வீட்டிலிருந்த குழந்தைகளிடம், நான் கொடுக்கச் சொன்னதாக நடித்து அவைகளைக் கொடுத்து விட்டு வந்து விட்டான். அன்றையதினம் அந்த மனிதர் அப்படிச் செய்திரா விட்டால், என் குடும்பத்தார் எல்லோரும் மாண்டிருப்பார்கள். நம்முடைய தேசத்தில் அரசர் இருக்கிறார், திவான் இருக்கிறார்; நான் அவர்களிடம் என் குடும்ப நிலைமையைத் தெளிவாகத்

77