பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திவான் லொடபட சிங் பகதூர்

கின்றனவே. நீங்கள் உங்களுடைய சொந்தச் செலவுக்கு என்ன செய்தீர்கள்? ஏதாவது பணம் எடுத்துக் கொண்டீர்களா?” என்றான்.

சமயற்காரர், "மகாராஜனே அந்தப் பணத்தை நான் என் கையாலும் தொடுவேனா? தொட்டிருந்தால் சட்டப்படி அது குற்றமாய் விடாதா? பிறருடைய பொருளை எவனொருவன் சுய நலங்கருதி அபகரிக்கிறானோ அவன் சட்டப்படி குற்றவாளியாகிறான் அல்லவா? ஆகையால், நான் என் சுய நலத்தைக் கருதவே இல்லை. நான் அன்று முதல் இந்தப் பத்துவருஷ காலமாய் இந்த திவானுடைய பெட்டி வண்டியின் கதவைத் திறந்து மூடும் சேவக உத்தியோகத்தை விடாமல் வகித்து ஒரு சாதாரணச் சேவகனுக்குக் கிடைக்கும் எட்டு ரூபாய் சம்பளத்தைப் பெற்று வந்திருக்கிறேன், வேண்டுமானால் எல்லோரும் என்னுடைய வீட்டுக்குப் போய்ப் பாருங்கள். என் சம்சாரமும் குழந்தைகளும் மெலிந்து பிணம் போல இருக்கிறார்கள். அவர்களுடைய உடம்பில் கந்தைகளைத் தவிர முழு வஸ்திரத்தை நீங்கள் காணமுடியாது. நானும் அவர்களும் குடிப்பது கஞ்சிதான். எங்கள் வீட்டிலிருப்பது மண் பாத்திரங்களே. எனக்குக் கிடைக்கும் எட்டு ரூபாய்க்குச் சரியான காலக்ஷேபந்தானே நாங்கள் செய்யவேண்டும்” என்றார்.

அதைக் கேட்ட மகாராஜனும், மற்ற சகலமான ஜனங்களும் நெடுமூச்செறிந்து, "ஆகாகா இவரே உண்மையான உத்தம புருஷர் இவரே உண்மையான மகான்! இவரைப் போன்ற மகா சிரேஷ்டமான சீல புருஷர்கள் ஏதோ ஒரு கற்பகாலத்தில் ஒருவர் தான் தோன்றுகிறார்கள்" என்று ஒருவருக்கொருவர் கூறி ஆர்ப்பரித்து வெகுநேரம் வரையில் வாய் மூடாது அவரைப் பலவாறு புகழ்ந்தனர்.

உடனே நமது சமயற்காரர் முறையே அரசனையும் ஜனங் களையும் பார்த்து, "மகாராஜனே! என்னை நீங்களெல்லோரும் புகழ வேண்டுமென்ற கருத்தோடு நான் இவ்விதமான தந்திரங்களைச் செய்யவில்லை. முக்கியமாக நம்முடைய சமஸ்தானத்தில் இராஜாங்க நிர்வாகம் திருந்தி செம்மைப்பட வேண்டுமென்ற கருத்துடனேயே நான் இப்படிச் செய்தது. சட்டங்களின் ஆதிக்கமொன்றே போதுமானதன்று. சாட்சியமிருக்கும் வழக்கெல்லாம்

81

தி.லொ.சி.6