பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

வாழ்க்கை பாழ்பட்டு அவர் துறவியாதலும், முடிவில் மறைந்த தமது தந்தையைக் காண்பதுமான பாகங்களால் இந்நாவலின் மதிப்பு வெகு சிலாக்கினையான உச்சிக்கு உயர்ந்து வாசகர்களைத் திடுக்கிட்டுப் போகும்படி செய்விக்கின்றது. விருத்த விவாகத்தின் கோரமும், விவாகம் செய்து கொண்ட ஆடவர்க்கு அதனால் ஸஞ்சலப் பெருக்கேயன்றி ஒரு துளி இன்பமுமில்லையென்பதும் குஞ்சிதயாத முதலியாரால் இனிது புலனாகும்.

இந்நாவலின் மற்ற பகுதிகள் இனி வெளிவரும் மூன்றாம் பாகத்தில் பூர்த்தி அடையுமென்று தெரிகிறது. ஆயினும் இவ்விரு பாகங்களினின்றே காலயூகங்கள் தோன்றுகின்றன. கோகிலாவை மணத்தற்காகக் கண்ணபிரானைத் தபாற்களவிற் சேர்த்த சுந்தரமூர்த்தியே அக்களவின் காரணஸ்தனாகலாம். செளந்தரவல்லி தனது மெல்லிய தன்மையில் சுந்தரமூர்த்தியால் கற்பழிந்தும் கெடலாம்? கோகிலா தன் நற்கணவனான கண்ணபிரானை மணந்து இன்புறுதலும் கைகூடலாம். திவானின் மனைவி தன் புத்திரனைக் கண்டித்து நடத்தும் பான்மைக் குறிப்புக்கும் (இரண்டாம் பாகம் பக்கம் 122) கற்பக வல்லி கண்ணபிரானைக் கடிந்துரைக்கும் குறிப்புக்கும் (முதற் பாகம் பக்கம் 51 - 52) உள்ள ஒற்றுமையைக் கொண்டு திவானின் காணாமற்போன மனைவியும் குமாரனுமே கற்பக வல்லியும் கண்ணபிரானுமென்றும் நினைக்கலாம். இக்கண்ணபிரானுக்கும் சுந்தரமூர்த்திக்கும் கூட ஒரு உறவு நேர்ந்து கொள்ளுமோவெனவும் ஐயம். எவ்விதமோ இந்நாவலின் மூன்றாம் பாகம் மிக்க சமத்காரமாய் எழுதப் பட்டிருக்குமென்பது திண்ணமாதலின் ஆத்யந்த ஸ்வாரஸ்யமான இந் நாவலின் முடிவுக்காக அம்மூன்றாம் பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்கின்றோம். ஆசிரியர்க்கு நமது வாழ்த்து.