பக்கம்:துங்கபத்திரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

"ஆம் பிரபு! பலன் அப்படித்தான் பேசுகிறது. இந்த ஏழைப் பார்ப்பான் எப்போதாவது இப்படிப் பேசியதுண்டா?" பண்டிதர் பவ்யமாகப் பேசினார்.

"யார் தோற்றாலும் சரி, இதனால் விஜயநகரப் பேரரசுக்கே பெரும் அழிவு வந்தாலும் கவலை இல்லை. அநீதியை எதிர்ப்பதில் ஒருபோதும் தயங்கக் கூடாது."

"ஜெய விஜயீபவ.....! படைத் தலைவர்கள் யார்?" பண்டிதர் குறுக்கே கேட்டார்.

"ஒரு படைக்கு விசுவநாதன், இன்னொரு படைக்கு அரியநாதன். போதாதா?" - ராயர் பதிலிறுத்தார்.

"மன்னிக்க வேண்டும் சக்கரவர்த்தி. நான் இவர்களுடைய வீரத்தைச் சந்தேகிப்பதாக எண்ணக்கூடாது. விசுவநாதனும், அரியநாதனும் வல்லவர்கள்தான். ஆனால், போர் அனுபவம் குறைந்தவர்கள்."–ராஜா அய்யர் மறுபடியும் எடுத்துரைத்தார்.

அனுபவம் எதற்கு? ஆற்றல் போதாதா? அதுவும் இரண்டு பேர்! ஒருவன் புலி, இவனொருவன் சிங்கம்! பண்டிதரே கவலையை விடும்! வெற்றி நமக்குத்தான்!" என்று அடித்துப்பேசினார் ராயர்.

"ஜெய விஜயீபவ ...... என் ஆசையை நான் தெரிவிக்கிறேன். ஒன்று தாங்களே படைக்குத் தலைமை வகிக்க வேண்டும்; அல்லது மண்டலேசுவரர் நாகமநாயக்கர் தலைமை வகித்துச் செல்லவேண்டும். சோழனின் ஜாதகத்தைக் கணித்துச் சொல்கிறேன். பிரபு, இதைத் தட்டிக் கழித்துவிடாதீர்கள்."– பண்டிதர், ராயரின் முடிவைத் திருப்பிவிட முனைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/19&oldid=1507346" இலிருந்து மீள்விக்கப்பட்டது