பக்கம்:துங்கபத்திரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அவனுக்குச் சிந்தனை. விளைவைப் பற்றி அவன் கவலைப் படவில்லை. சபையின் முடிவையும் அவன் நம்பியிருக்க வில்லை. அவன் கருத்தைக் கொட்டிவிட அவன் துடித்தான். "மன்னர் பிரானே, இந்தச் சபையின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குப் புறம்பான ஒரு எதிர்க் கருத்தை இங்கே நான் வெளியிட விரும்புகிறேன். மாமேதை பண்டிதமணி ராஜா அய்யர் இன்று சபைக்கு வரவில்லை. ஆனால், சபையோ அவர் கொலையுண்டார் என்று கருதுகிறது. அதை நான் நம்பவில்லை. மகமதிய வீரனைப் போல் வேடமிட்டு குற்றவானியாக நிற்பவன் வேறு யாருமல்ல. நமது பண்டிதமணி ராஜா அய்யர்தான் என்பது என்னுடைய தெளிவான வாதம். குற்றவாளி அவனுடைய குரலை வெளிப்படுத்தாதது இதற்கு ஒரு சான்று?" என்று விசுவநாத நாயக்கன் அவனது கருத்தைக் கக்கிவிட்டான்.

சபையில் பேரலைபோல் சலசலப்பு ஏற்பட்டது. வீசுவநாதனின் ஆருயிர் நண்பன் அரியநாதன் தனது நண்பன் பெரும் பழிக்கு ஆளாகி விட்டதாக எண்ணி கைகளை நெறித்தான். துணைக்குரல் கிடைக்காமல் தனிக் குரலைக் கொடுத்துவிட்டு ராயரின் தீர்ப்பை எதிர் நோக்கியிருந்தான் விசுவநாதன். ஆனால் ராயரும் சபையின் பக்கம் சேர்ந்து கொள்வாரென்று அவன் நினைக்க வில்லை. "விசுவநாதன் வாலிபன். ரத்தக் கொதிப்பில் அவன் பேசுகிறான். சபை அவனை மன்னிக்க வேண்டும்" என்று ராயர் பேசிவிட்டு விசுவநானைப் பார்த்தார். அந்தப் பார்வை விசுவநாதனைச் சுட்டுப் பொசுக்கியது. விசுவநாதனின் கண்களில் நீர்வடிந்தது.

இந்த நேரத்தில் ராஜசபையின் கவனத்தை ஓர் அபயக் குரல் கவர்ந்து பற்றியது. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோல்களால் கெடுக்கப்பட்ட புண்ணான கண்களையுடைய ஏழை ஒருவன் ஊன்றுகோலின் துணையுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/26&oldid=1507353" இலிருந்து மீள்விக்கப்பட்டது