பக்கம்:துங்கபத்திரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

விசுவநாதன் திகைத்தான். புலவரின் பீடிகை அவனது ரத்த ஓட்டத்தைக்கூட தடைசெய்து விடும்போல் இருந்தது. ஓரக்கண்ணால் அவன் தாயார் மங்கம்மா மறைந்திருந்த அறையைப் பார்த்தான். உள்ளே இருந்தபடி அவள் ஒரு மரப்பொந்தின் வழியாக துர்ஜதியாரின் அறிவுரையைக் கவனித்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. துயரம் ஒருபடி உயர்ந்தது.

"இவர், அவைப் புலவர் தானே, நமது சொந்த வாழ்க்கையில் தலையிட இவருக்கென்ன உரிமை இருக்கிறது என்று கருதி விடாதே! நல்வழி கூறுவது என் தொண்டு. என் வழி முள்வழி என்றால் நானே அவர்களை நெருஞ்சிக் காட்டில் தூக்கி எரிந்து விடுவேன். எதையும் உன்னிடம் மூடி மறைத்துப் பேச விரும்பவில்லை. என்னிடம் எவ்வளவுதான் மறைத்தாலும் நான் நம்ப மாட்டேன். இதோ பார் விசுவநாதா! அந்தப்புரத்திலிருந்து எனக்கு கம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது. நீ இளவரசி துங்கபத்திரை மீது வைத்திருக்கும் காதலைத் துறந்து விட வேண்டும். நீ விவரம் அறிந்தவன். குருகுலவாசம் செய்து அந்நிய நாட்டு வரலாறுகளும், அரச தந்திரமும் கற்றவன். எந்த மன்னனாவது அவன் மகளின் காதலை மதித்து அவன் விரும்பிய காதலனுக்கு மணம் செய்து கொடுத்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா? தென்பாண்டி நாடாகட்டும் பொன் கொழிக்கும் சோழதேசமாகட்டும், சேயிழை மலிந்த சேர மண்டலமாகட்டும், எங்காவது அரச குமாரியின் காதல் கை கூடியதுண்டா?" துர்ஐதியார் உணர்ச்சி பொங்கப் பேசினார். "புலவீர்!' என்று குறுக்கே நிறுத்தினான்.

"பொறு! இன்னொரு கொடுமை மறந்து விடாதே! எந்த மன்னனும் இதுவரை காதல் குற்றத்திற்காக தன் மகளைக் கண்டிப்பதில்லை. மகா கவிகளைக் கொண்டு காதல் காவியங்களைப் படிக்கச் சொல்லி இன்புற்று மகிழ்ந்த மாமன்னர்கள் கூட அந்தப்புரத்து மோகனாஸ்திரத்திற்கு அடிமைப்பட்ட அப்பாவி வாலிபர்களைத்தான் தூக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/36&oldid=1507585" இலிருந்து மீள்விக்கப்பட்டது