பக்கம்:துங்கபத்திரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

விட்டு அவரும் இப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தார். வெற்றி தோல்வி தெரியாமல் அவர் முகம் எண்ணெய் படிந்து இருந்தது. பசித்த வயிறு போல் கண்கள் பள்ளம் பாய்ந்து கிடந்தன.

"கங்கா!"

"அப்பா!"

"தண்ணீர் கொண்டு வா!"

புத்திரி கங்கா வெள்ளிக் குவளையில் பழரசம் கொண்டு வந்து கொடுத்தாள்.

"வினை விதைத்து வந்திருக்கிறேன் கங்கா! விளைச்சல் உனது சாமர்த்தியத்தைப் பொறுத்தது மகளே!" என்றார்.

"வினையா விதைத்து விட்டீர்கள்."– அதிர்ச்சியோடு கேட்டாள் கங்கா.

"பைத்தியக்காரப் பெண்ணே! உலகத்தில் எல்லோரும் புத்திசாலியாகி விடுவார்களா? வினை விதைத்து விட்டு தினை அறுப்பவன் தான் அதிசமர்த்தன். உன் பிதா வினை தான் விதைப்பான்; தினைதான் அறுப்பான்; அஞ்சற்க மகளே" என்றார் துர்ஜதி. படமெடுத்தாடும் நாகத்தைப் போல் அவரது அரை வட்டப் புருவங்கள் குனிந்து நிமிர்ந்தன.

"என்னப்பா பேசுகிறீர்கள்? எனக்கு ஒன்றுமே விளங்க வில்லையே!”

"உனக்கா விளங்காது? நீ ஊரை வளைத்துத் தோரணங் கட்டி விடுவாயே!... கங்கா, தாயில்லாப் பிள்ளை என்பதற்காக தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் உழன்று கொண்டிருக்கிறேன். நீ போயிரு. இப்போது விசுவநாதன் வருவான்! இவ்வளவு நேரம் அவன் மனம் உடைந்து தவிடு பொடியாகியிருக்கும்" என்றார் துர்ஜதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/40&oldid=1507590" இலிருந்து மீள்விக்கப்பட்டது