பக்கம்:துங்கபத்திரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

இப்போதுதான் சொன்னீர்கள். அதற்குள்ளே மறைக்கிறீர்களே!" என்று இடைமறித்தாள் கங்கா.

"எல்லாம் நீ நற்கதி அடைவதற்காக உன் தந்தை துர்ஜதி செய்த சதி குழந்தாய்! இளவரசி துங்கபத்திரை எழுதியதைப் போல் ஒரு பொய் ஓலை எழுதி விசுவநாதன் வீட்டில் போட்டேன். விசுவநாதன் அதைப் படித்துப் பார்த்துவிட்டு அதன்படி இளவரசியைச் சந்திப்பதற்காக இரவோடு இரவாக அந்தப்புரத்திற்கு ஓடோடி வந்தான். பாவம் காத்துக் கிடந்தான். இந்தக் காட்சியைக் காண்பதற்காக நான் அரியநாதனை அழைத்துக்கொண்டு போனேன். என் பேச்சை முதலில் நம்பாத அரியநாதன் நேரில் கண்ட பிறகு நம்பாமல் இருக்க முடியுமா? மலைபோல் நம்பிவிட்டான். இன்றைக்கே மன்னரிடம் சொன்னாலும் சொல்லி விடுவான், நம் மன்னர் ஒரு மாதிரி"

"பாவம் நாகமருக்கு ஒரே பிள்ளை செத்துப்போய் விட்டால் என்ன செய்வதப்பா!"

"ஏய் கங்கா! எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் எதிரியிடம் இரக்கம் காட்டக் கூடாதென்று! போர் உள்ளே போ" என்று எரிந்து விழுந்தார் துர்ஜதி, கங்கா உள்ளே போனாள். அப்போது வாசற்பக்கமிருந்து, "மன்னிக்க வேண்டும். முன்னறிவிப்பு இன்றி வருகிறேன். வணக்கம்” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டார் துர்ஜதி. தளபதி சிங்கராயன் உள்ளே நுழைந்தான்.

"என்ன தளபதியாரே, தலைவிரிகோலமாய் வந்திருக்கிறீர்கள்? உடல் நலமில்லையோ?"

"உடல் நலத்திற்கென்ன குறை! உள்ளம் தான் சூடேறி யிருக்கிறது. நாமொன்று நினைக்க, நம் மன்னர் ஒன்று நினைக்கிறார். நான் பதவியை ராஜினாமாச் செய்ய முடிவு செய்துவிட்டேன்."–மலை முகட்டிலிருந்து உருண்டு விழும் பாறை போல், வார்த்தைகளைக் கொட்டினான் சிங்கராயன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/53&oldid=1507890" இலிருந்து மீள்விக்கப்பட்டது