பக்கம்:துங்கபத்திரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

"காரணம்? மன்னருக்கு உம்மீது நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டுவிட்டதா?"

"விசுவநாதன் நேற்று வரை சிப்பாயாக இருந்தவன் இன்று அவன் வடஎல்லைக் காவற்படையின் தலைவன். அவமானம்! அவமானம்! எனக்கும் அவனுக்கும் வேறுபாடு வேண்டாமா?" –ஆத்திரம் பொங்கப் பேசினான் சிங்கராயன்.

"உண்மைதான். விசுவநாதன், வீரனாக இருந்தாலும் எல்லைகாக்கும் பொறுப்பான பணிக்கு விசுவநாதனைத் தலைவனாகப் போட்டிருக்கக் கூடாது...... எனக்குத் தெரியவே இல்லையே! எப்போது நியமித்தார்கள்?" துர்ஜதி, சிங்கராயன் கோபத்தில் நெய்யைக் கொட்டினார்.

"புலவரே, அரசரின் ஆலோசனைக் குழுவில் நீங்கள் இடம் பெற்றிருப்பதால் கூறுகிறேன். அரசாங்கத்தின் போக்கு இப்படியே நீடிக்குமானால் விஜயநகரப் பேரரசு உண்மையான ஊழியர் பலரை இழக்க நேரிடும் என்பதை மறந்துவிடக் கூடாது."–சிங்கராயனின் பேச்சில் ஏமாற்றத்தின் எதிரொலி இருந்தது; தோல்வியின் சாயல் தென்பட்டது.

"பதறாதீர்கள், மன்னரிடம் இதுபற்றிப் பேசுவோம். ஆனால் ராஜினாமா என்ற பேச்சே இருக்கக் கூடாது. அது பலவீனம்! நம் நாட்டுக்கே இழுக்கு. சிங்கராயரே, நான் யார் மீதும் தனி அன்பு காட்டுவதில்லை. என் இதயத்தில் யாருக்கும் இடம் ஒதுக்குவதுமில்லை. யாருடைய நல்ல குணமும் என்னைக் கவர்ந்ததில்லை. நானாக விரும்பி யார் மீதாவது விருப்பம் வைப்பதுண்டு. புத்திசாலிகள் அதைப் புரிந்து கொள்வார்கள். நான் நினைத்தால் உம்மை நாகமர் இருக்கும் இடத்திற்கு உயர்த்த முடியும். 'மகாமண்டலேசுவரர்' என்ற பட்டத்தையும் தேடித் தருவேன்... கங்கா இங்கே வா!"– துர்ஜதி தளபதியிடம் பேசிக்கொண்டே கங்காவை அழைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/54&oldid=1507891" இலிருந்து மீள்விக்கப்பட்டது