பக்கம்:துணிந்தவன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 45 அக்குடும்பத்தின் அந்தஸ்து மத்தியதர வர்க்கத்தின் மேல் தட்டிலிருந்து கீழ்ப்படிக்கு இறங்கியது. காலப்போக்கிலே தரித்திர நிலை என்பதையும் தொட்டது. மீனாட்சி அம்மாளும் காலமான பின், மாதவன் எப்படியோ நாள் ஒட்டி வந்தான். ஆள் பெயருக்கு அவனும் நடமாடித் திரிந்தானே தவிர, நன்றாக வாழவில்லை. எனினும், நல்லவனாக வாழ முயல்வதை அவன் விட்டு விட வில்லை. 'நல்லதனம்’ அவனை எந்த வேலையிலும் ஒட்டிக் கொண்டிருக்க விடவில்லை. அரசாங்க இலாகா ஒன்றில் குமாஸ்தா வேலைக்குப் போனான். மேலதிகாரிகளின் மிடுக்கும், அதிகார தோரணையும், அவனுக்குப் பிடிக்க வில்லை, அதனால் அவ்வேலையை விட்டுவிட்டான். கடை ஒன்றிலே கணக்கு எழுதுகிறவனாகச் சேர்ந்தான். முதலாளிகளின் மனோபாவமும் எத்து வேலைகளும் அவனுக்கு ஒத்து வரவில்லை. ஆகவே அதற்கும் கும்பிடு போட்டான். இப்படிப் பல துறைகளிலும் புகுந்து பார்த்து, அனுபவப்பட்டதன் மூலம் அவனுக்கு வெறுப்பும் கசப்பும் விரக்தியும்தான் வளர்ந்தன. பொருளாதார லாபம் எதுவுமே கிடையாது. முடிவில், விவசாயத்தில் ஈடு பட்டான். அது அவன் சோம்பலுக்கு உரமிட்டது. 'ஏதோ நமக்கும் பிழைப்பு என்று ஒன்று இருக்கிறது!’ என்று பெயர் பண்ண உதவியது. பழங்காலத்துக் கவிராயர்கள் பாடி வைத்திருப்பது போல் பெருமதிப்போ, உயர்வோ, ஊதியமோ, கொடுத்து விடவில்லை விவசாயம். அவனுக்கு நேரம் நிறைய இருந்தது. படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் தான், எனவே சைத்தான் மனசுக்கு சதா தொழில் இருந்தது. இதனாலெல்லாம் அவனுடைய வெறுப்பு நன்கு வளர முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/27&oldid=923498" இலிருந்து மீள்விக்கப்பட்டது