பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தியாகம்


அம்மொழி கேட்டவுடன்-முகம்
 அன்றலர் தாமரையாய்ச்
 செம்மொழி கூறுகின்றாள்-
 அன்பின் தெய்வ மேயன்ன மங்கை.
 
 'குடிதுயர் தான் களைதல்-உயர்
 கொற்றவன் தன் கடனாம். -
 கடிமணம் செய்தவர்க் காய்-வாழ்தல்
 கன்னியர் தங் கடனாம்.
 
 ஆதலின் என் பதியே-என்னை
 அர்ப்பணம் செய்திடுவீர்.
 காதற் கணவனுக்கும்-மக்கள்
 கண்ணிர் துடைப்பதற்கும்
 
 சாகக் கொடுத்து வைத்தேன்-இதிற்
 சாலச் சிறந்த தில்லை;
 தேக மெடுத்தபயன்-இன்று
 தெய்வங் கொடுத்த தென்றாள்.
 
 மன்னன் மனங் குழம்ப-மறுநாள்
 மக்கள் உளந் துடிக்க
 மின்னெனக் கேணியுளே-நங்கை
 வேகமாய்ச் சென்றடைந்தாள்.
 
 ஆழக் கிணற்றினுள்ளே-மறைந்த
 அன்புருக் காணாமலே
 தாழுங் குரலினிலே-மன்னன்
 தயங்கியே கேட்டிடு வான் :

       126