பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரன் குமரன்

அன்னையின் இன்மொழி கேட்டனன்-அவள்
அடிமலர் கண்களில் ஒற்றினன்;
"சொன்ன அறிவுரை போற்றுவேன்-உங்கள்
சூரத் தமிழ்மர போங்கவே."

வாங்கினன் கையிற் கொடியினை-நீல
வானில் ஜொலித்தது மூவர்ணம் :
பாங்கினில் அன்னையும் நெற்றியில்-வெற்றி
பாடித் திலகம் அணிந்தனள்.

"ஜய ஜய பாரதம்" என்றுமே-கூவித்
தலைநிமிர்ந் தேகினன் காளையும் ;
"ஜயஜய" என்றுபல் லாயிரம்-மக்கள்
சாற்றிப் பின்சென்றனர் வீதியில்.

பேரொலி அண்டம் பிளந்தது-அடிமைப்
பிடியும் மனத்தில் தளர்ந்தது;
வீரக் குமரனோர் சிங்கம்போல்-தடை
மீறிப் பவனியாய் வந்தனன்.

வெள்ளையர் விட்டெறி காசுக்காய்-மானம்
விற்றுப் பிழைத்திட்ட சேவகர்
கள்ளனைத் தேடிப் பிடியென்றால்-அவனைக்
காட்டிற் பிடிப்பம்என் றோதிடும்

சூரரத் தாசர் தலைவனாம்-ஒரு
சொத்தைப் பயல்வந்து தோன்றினான்
பாரதம் வாழ்கெனக் கூறினால்-அவன்
பார்த்துச் சகித்திடல் ஒண்ணுமோ

129