பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிழவியும் ராணாவும்


ராணா பிரதாப சிம்மன் ஓர் ஒப்பற்ற வீரன். அழி யாப் புகழ் படைத்தவன். டெல்லிச் சக்கரவர்த்தி யாகிய அக்பரை எதிர்த்து நின்று பல போர்கள் செய்தவன். ஆனால் பல முறை அவன் தோல்வியுற நேர்ந்தது. தனது சித்துார்க் கோட்டையையு மிழந்து ஆரவல்லி மலைத்தொடரிலே அலைந்து திரிந் தான். கோட்டையை மீட்பதே தன்னுடைய லட்சிய மாகக் கொண்டிருந்தான். அதை அடைவதற்கு எவ் வளவோ துன்பங்களை அனுபவித்தான். இடையிலே அவன் ஒரு சமயம் சற்று உள்ளம் தளர்ந்து நாட்டை விட்டுச் சிந்து நதிக்கு வடக்கே சென்றுவிடத் தீர் மானம் செய்து புறப்பட்டதாகச் சரித்திரம் கூறு கிறது. ஆனால் உண்மையில் அவன் அவ்வாறு சென்றுவிடவில்லை. செல்லாமல் திரும்பியதற்குக் காரணமாக ஒரு கற்பனைச் சம்பவம் பாடலிலே வரு கின்றது.

புயல் வெடித்துப் படீரெனப் பொங்கவும்
பொய்ய ருள்ளம்போல் வானம் கருத்தது;
உயர வானிடை நீங்கிடும் புள்ளெலாம்
உயி ரொடுங்கிச் சிதறி யடங்கின.

சூறைக் காற்றுப் புலியெனச் சீறியே
சுற்றிச் சாடி வளைத்து மரங்களைக்
கூறும் பேயென நாற்றிசை ஆட்டிடக்
கொந்த ளித்தது காட்டும் புறமெலாம்.


132