பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பிருதிவிராஜ்-சம்யுக்தை

நையு முளத்தின ளாகியே
நாடிப் பலபல வெண்ணினாள்;
பைய நடந்தவள் வாசலில்
பதுமை இருப்பிடம் நண்ணினாள்.

"நற்சிலை யாகவே வந்தநீ
நாதன்” எனமாலை சூடினாள்;
பொற்சிலை போன்றவள் சோகத்தால்
பொருமியே சாய்ந்தனள் மூர்ச்சையாய்.

தரையினிற் பூவுடல் சேருமுன்
தாங்கின காதலன் கைகளே!
மறைவினில் நின்றவன் பிருதிவி
மங்கையை ஏந்தியே பாய்ந்தனன்.

ஒருத்தர் துணையின்றிச் சிங்கம்போல்
ஓங்கிய காதலால் வந்தவன்
கருத்தை உணர்ந்திடும் புரவிதான்
காற்றினைப் போலப் பறக்குமால்.

கொம்பனை யாளையோர் கையினில்
கூரிய வாளொரு கையினில்
நம்பிக் குதிரையை விட்டனன்
நாலுகால் பாய்ச்சலில சென்றதே

கூடிய மன்னர் திகைத்தனர்,
கூறினர் வஞ்சினம் கோபமாய்;
ஓடிய பேர்களோ ராயிரம்,
உருபரி ஊர்ந்தவ ராயிரம்.

வாள்களோ ராயிரம் மின்னவே
வல்லமை பேசினர் ஆயினும்
வேளினைப் போன்றவன் தன்னையும்
மின்னிடை யாளையும் கண்டதார்?

138