பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அழுங்குழந்தை


[ஒருநாள் மாலையில் உலவப் போனபோது
வீதியில் தனியாக நின்று அழுதுகொண்டிருந்த குழந்
தையைக் கண்டு பாடியது.]

ஆருடைய குழந்தைஇது
அழுதுகொண்டு நிற்கிறதே ?
சீருடைய முகம் சிவக்கச்
சிறுகையால் கண்பிசைந்து
விம்மிவிம்மித் தேம்பி
விழிநீர் மிகப்பெருக்கி
அம்மம்மா என்று சொல்லி
அங்குமிங்கும் பார்க்கிறதே !

(ஆருடைய குழந்தையிது
  அழுதுகொண்டு நிற்கிறதே!)

மையிற் படர்ந்த இருள்
மாய்க்கவரும் ஞாயிறுபோல்
வையத்திருள் வாழ்வை
வளரின்ப மாக்க வரும்
தெய்வச் சுடர்க்குழந்தை
சிரித்தமுகம் வாடிமிக
நையக்கண் டால் உள்ளம்
நடுங்குகின்ற தென்செய்வேன்?

23