பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிற் குஞ்சு



கறுத்த உடல்வளரக்
கண்குளிர நோக்கிப்பின்
இனித்த குரல்கேட்டு
இப்பெரிய கோபமும்ஏன் ?

நடுங்கியுயிர் போமுன்னே
நல்லிசையன் பட்டதுயர்
கொடுமூக்காய் எப்படித்தான்
கூசாமற் பார்த்தனையோ

தேடி யிரைகொணர்ந்தாய்
திசையெல்லாஞ் சென்றலைந்தாய்
வாடிப் பசித்திருந்தே
வந்துணவு தான்தந்தாய்

தாயென் றுனைமதித்துத்
தண்ணமுத வாயெடுக்கப்
பேயைப்போ லானதுமேன்
பெருந்தலைச்சி நீதானே ?

அன்புதனை யல்லால்மற்
றறியாத பைங்குழலும்
துன்பப் பெருக்கால்
துளைபட்டுப் போயிற்றே!

வசந்தத்தின் தூதுவனை
மாஞ்சோலை யின்னிசையைக்
கசந்த மனத்தாலே
காக்கை கடித்த தந்தோ!

28