பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றம்

அல்லியும் தாமரை அரசியும் மலர்ந்து
எல்லையில் லாதவோர் எழில்நிறை கன்னிபோல்
பொங்கும் வனப்புப் பொய்கையைக் கண்டுநான்
அங்கதன் முறுவலில் அமைதியில் குழந்தைத்
தன்மையில் உள்ள்ம் தளைபடப் பொழுது
சென்றிடக் கண்டும் சிலையாய் நின்றேன்
குரலினிற் கவலையே கொழுந்திடக் கூவியே
ஒருதாய் ஆங்கே ஒடியே வந்தனள்
மைந்தனைக் காணுத் துயரது மண்டிட
வந்தவர் தமையெலாம் வருந்தியே கேட்டுத்
தேடியே வந்தனள் தென்திசைப் பொய்கையின்
கோடின கரையினில் குறும்புதர் மறைவினில்
கண்டனள் ஆடைகள் கதறியே சாய்ந்தாள்
உண்டதோ சிறுவனை வண்டு சூழ் பொய்கையும்
வாய்பிளந் தந்தோ மகவினை விழுங்கும்
பேய்தனக் கித்தனை பெண்மையேன் பொலிவேன்?
கூற்றம் மயக்குருக் கொண்டதோ அன்றித்
தோற்றம் உண்மையைச் சொல்வதே இல்லையோ?

                                                                                                                                                                        310