பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

கொன்றை அனல்பூத்துக் குயில்வாடுங் கார்காலம்
கன்றி உளம்நைந்து காதலர்தம் பிரிவஞ்சும்
இருளுக் கிருள்போர்த்த இறுதியிலா இரவொன்றில்
கருமை வளர்ந்துவரும் புரவி தனிலேறி
நான்போகும் வேகம் நளனாலு மாகாதே;
கான்யாறு தான்கடந்து காதலியின் வீடுசென்றேன்;
எல்லாரும் தூங்குகிறார், ஏதும் தடங்கலில்லை;
செல்லாமற் சென்றேன், தீங்குழலின் பேச்சுடைய
நங்கை உறங்கும் நல்லறைக்கு நேராக.
அங்கே எனக்காக அவள் காத்து நின்றிருந்தாள்;
கண்டேன் களிதுள்ளக் கட்டித் தழுவிடவே
செண்டாகத் தாவினேன்;கண்துயின்ற கட்டில்விட்டு
மெய்யாக வீழ்ந்தேன்;விழித்திட்டேன்----
ஐயோ, கனவே! ஆசையெல்லாம் பொடித்தாயே.

கொன்றைஅனல்பூத்து-கொன்றை கார்காலத்திலே
பூக்கிறது; அதன் பூ அனல்போல விளங்குகிறது.

    நளனாலுமாகாது-வேகமாகக் குதிரையைச் செலுத்துவதில்
நளன் புகழ்பெற்றவன்.