பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரார்த்தனை

அகந்துயர் உண்டிட அவலமே ஆயினர்
திகழொளி வதனமும் சீர்குலைந் திட்டார் ;
நெற்றியில் வந்ததே ஒற்றைக் கீறலும் ;
சுற்றியென் உளத்தினில் சுவைத்திடு நகையும்
இழந்தனர். அந்தோ ! இறைவனே இவற்றால்
உழந்துநா னிருக்க உற்றதோர் பேரிடி -
சென்றதோர்.இரவினில் சிறிதும்துயில்கொளாது
என்றனுாழ் வினையினை எண்ணியே கிடந்தேன் ;
தூங்கினர் கணவர் சோர்வுடன் ; அறியாது
ஆங்கொரு மொழிதான் அவர்வாய்ப் பிறந்தது;
'இவளால் என்றன் இன்பந் துறந்தேன்;
கமலா, உன்றன் காதலும் இழந்தேன்
என்றனர் ஐயகோ இதயம் வெடித்திட.
பொன்றின உளத்துள் பொதிந்தஎன் கனவெலாம்
என்னநான் செயினும் என்பால் அவர்க்கு
மன்னிய காதல் வரஇனி வழியிலை :
வேற்றொரு மங்கையை விரும்பியே என்பதி
ஆற்றொணா ஏக்கத் தழுந்தினர் அறிந்தேன்.
நாதன்நல் லின்பமே நங்கையற் கின்பமாம் ;
பேதைநான் அவர்க்குப் பீடையாய் வந்துளேன்.
இறந்தனன் எனினும் இரண்டாந்தாரமாய்
மறந்தறி யாதஅம் மங்கையை மணப்பர்.
இனியெனக் குலகினில் என்னிருக் கின்றது ?
பனிமதிச் சடையீர் பரிவுடன் ஏழையை
இணையடி மலர்களில் ஏற்றருள் வீரே :
கணவர்நற் சுகந்தனில் களித்திடச் செய்வீர் ;
இன்னுமோர் பிறவி இருந்திடில், -
என்னுடை நாதனோ டினிதுறப் புரிகவே.