பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருளும் ஒளியும்

சூரியன் உலகிற் பாதியை ஆள்கின்றான்
இரவரசி மறு பாதியை ஆள்கின்றாள்
அவள் அவன் காதலி
வைகறையில் இரவரசி ஒளியிற் கலக்கின்றாள்
ஞாயிறு அன்புடன் நீட்டிய கைகளில் மறைகின்றாள்
மாலையில் ஒளியிலே இருள் காண்கிறது
காலையில் இருளில் ஒளி காண்கிறது
இரவரசி குளிர்ச்சி தருகின்றாள்
பரிதி வெப்பம் தருகின்றான்
இருவரும் உயிர்களைக் காக்கின்றனர்
இரவு கறுப்பு; தண்மையை உடையவள்
பராசக்தி.
ஞாயிறு சிவப்பு; வெம்மையை உடையவன்;
சிவன்.
பாரசக்தி பாதி, சிவன் பாதி --
ஒருவரில்லாவிட்டாலும் உலகம் அழியும்.
இரவு சலித்த உயிர்களின் சோகம் தவிர்க்கின்றாள்
உறங்க வைக்கின்றாள்
கரும் போர்வையை உலகின்மீது போர்த்துகின்றாள்
அவள் உலகத்தின் தாய்
பராசக்தி.
சூரியன் உயிர் கொடுக்கின்றான்
ஒளி கொடுக்கின்றான்
காய்கின்றான்
அவன் தந்தை
சிவன்.

                61