பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சுதந்திரத் திருநாள் சுதந்திரத் திருநாள் வந்ததடா-அடிமைத் துன்பம் மறைந்த நாள் வந்ததடா அதிர முழக்கிமுர சார்த்திடுவோம்-நமது அன்னையை வாழ்த்தியே பாடிடுவோம்.

இத்தனை நாளடிமைப்பட்டதலை -இங்கே எத்தனையோ சிறுமை தோன்றினவே;அத்தனையும் தொலையச் செய்திடுவோம்-தேசம்புத்துயிர் தாங்கவே பணிபுரிவோம்.

விடுதலை வந்ததும் இன்பமெலாம்-உடனே மேவிடும் என்பது வீண்கனவாம் ; திடமுடன் ஆற்றிடும் செயல்களினல்-புன்மை தீர்ந்துநற் சுகமெலாம் சேர்த்திடுவோம்.

பஞ்சமும் நோய்களும் பேதமையும் இன்னும் பாரத நாட்டினில் இருந்திடவோ? வஞ்சமும் சூதுபொய் மாண்டிடவும்-அறிவு வாய்ந்துநா மனைவரும் வாழ்ந்திடவும்

கலைமணம் எங்கணும் வீசிடவும்-உயர் காதல்வாழ் வன்பறம் கூடிடவும் தலைநிமிர்ந் தனைவரும் நின்றிடவும்-நல்ல சமத்துவ வாழ்வினை நாட்டிடவும்

அரியதாம் செயல்பல முனைந்திடுவோம்-இதை அமரர்தம் லோகமாய் மாற்றிடுவோம். பெருமைகள் சேர்ப்பதே சுதந்திரம் நாம்-இன்று பெற்றதன் நோக்கமென்றுணர்ந்திடுவோம்.

             82