பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சோதனை

அன்பொரு வடிவுகொண் டமர்ந்தது போலப் பொன்னெளிர் வதனப் புத்தனு மிருந்தான்- வந்தனன் இடிக்குரல் வளையெயிற் றரக்கன் வெந்தழல் பொங்கும் விழிதமைப் பிதுக்கி வானமும் அதிர்ந்திட வையமும் துளங்கிட மோனமும் கலைந்திட மொழிக்கனல் சொரிவான்; "அன்பர சுலகினில் அமைக்கவோ நினைத்தாய்? அன்பினைப் பகைமை அழித்திடல் காண்பாய் : உன்றனை விழுங்கிநான் ஒழித்திடுவே னிதோ" என்றனன். சாந்தியின் இருப்பிட மன்னன் கமலமென் கையினைக் கருணையால் மலர்த்தி அகமதில் சினமோ அச்சமோ இலாமல் செவ்விதழ் அரும்பிய சிறுநகை தவழ இவ்வித முரைப்பான்; "இன்னுயிர்த் தோழனாய் உன்னையும் கொண்டனன் ; உகந்தது புரிவாய்" என்னுமிம் மொழி கேட்டிருங்கக னத்திடை ஓங்கினின் றுருமிய உரித்தவாய் அரக்கன் ஆங்கொரு புறவின் வடிவினை அடைந்தான். "அன்பினைப் பகைமையால் அழிக்க வொண்ணதே ; என்பும் பிறர்க்கென இருப்பவர் வெல்லுவார், நித்திய வாழ்வினில் நிலைபெற் றிருப்பார், சத்தியமிது” வெனச் சாற்றினன், பறந்தான் ஐயனின் மனத்திடன் அறிந்திடப் பொய்யுரு வெடுத்துப் போந்தவத் தேவனே.


வளையெயிற்று-வளைந்த பற்களையுடைய. துளங்கிட நடுங்கிட,


            91