உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்ககாலப் போர்கள் -3

93

நலங்கிள்ளியின் பொருநராய் இருப்பதால் மன்னர்களுக்கிக் கிடைக்காத ஒரு பெருமை தமக்கே கிடைத்ததாகக் கோவூர் கிழார் ஒரு பாட்டில் நயமாகக் குறிக்கிறார். அவர் முரசறையக் குணில் எடுத்தாலே அரசர் எல்லோரும் நடுங்கினராம்! ஏனெனில் அது நலங்கிள்ளி படையெழுச்சிக்கு அடையாளமாய் இருந்தது!

கோவூர்கிழாரேயன்றி ஆலத்தூர் கிழார், உறையூர் முது கண்ணன் சாத்தனார் என்ற புலவர்களும் இவ்வரசனைப் பாடியுள்ளனர். இவர்கள் அவன் தற்பெருமையை நயமாகச் சுட்டிக் காட்டினர். போர் வெறி போதாது; அன்பும் அருளும் அரசர்க்கு அணி' என்று அவர்கள் அவனை இடித்துரைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பேரவாவுடைய இந்த அரசனுக்கு அவன் ஆட்சியின் முற் பகுதி முழுவதும் அருகிலேயே எதிர்ப்பு இருந்தது. சோழர் குடியின் இளவரசனான நெடுங்கிள்ளி என்பவன் அவனுக்கெதிராக எழுந்து உறையூர் ஆவூர் ஆகிய நகரங்களைக் கைப்பற்றி ஆண்டு வந்தான். நலங்கிள்ளி பெரும் படைகளுடன் புறப்பட்டுச் சென்று அவனை அடக்கி ஒடுக்க முற்பட்டான். நலங்கிள்ளிக்கு மாவளத்தான் என்று ஒரு தம்பி உண்டு. நெடுங்கிள்ளிக் கெதிராகப் போரிலீடுபடும்படி அவனை நலங்கிள்ளி அனுப்பினான். நெடுங்கிள்ளி அச்சமயம் கோவூரிலிருந்தான். மாவளத்தான் அந்நகரை முற்றுகையிட்டான். இம் முற்றுகை பற்றிய இரண்டு செய்திகள் நமக்குத் தெரிகின்றன. முதலாவது இளந்தத்தன் என்ற புலவன் நலங்கிள்ளியைப் பாடிவிட்டு, நெடுங்கிள்ளியையும் பாட ஆவூர் வந்தான். அவனை நலங்கிள்ளியின் ஒற்றன் என்றெண்ணி நெடுங்கிள்ளி கொல்ல முற்பட்டான். கோவூர்கிழார் ஓடோடிச் புலவர்கள் நடு நிலையுரிமையை எடுத்துரைத்து சென்று அவனைக் காத்தார் (புறம் 47).

ஆவூர் முற்றுகை நாள் கணக்காக, வாரக் கணக்காக நீடித்தது. நெடுங்கிள்ளி வெளிவந்து போரிடாமல் கோட்டைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தான். இதனால் நகரத்தின் உள்ளிருந்த மக்களுக்கும் உயிரினங்களுக்கும் பெருத்த முட்டுப்பாடு ஏற்பட்டது. கோவூர்கிழார் மீண்டும் நெடுங்கிள்ளியிடம் சென்று வீர அறிவுரை தந்தார். 'வீரமரபில் வந்தவன் நீ, குடிகள் வருந்த இப்படி அடைபட்டுக் கிடப்பது நன்றன்று. போர் புரிய விருப்பம் இருந்தால், ஆண்மையோடு வெளியே வந்து வெற்றி தேடு. இல்லாவிட்டால் நாட்டுக்குரியவனிடம் கோட்டையை விட்டுவிடு' என்றார் (புறம் 44).