உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தென்னாட்டுப் போர்க்களங்கள்

நெடுங்கிள்ளி இச்சுடு சொற்களால் உளங்கிளறப் பெற்று வெளியே வந்து போரிட்டான். அவன் தோற்று விடவே, ஆவூரைத் துறந்துவிட்டு உறையூர் சென்று தங்கினான். சில நாட்களுக்குள் நலங்கிள்ளி அங்கும் வந்து முற்றுகை தொடங்கினான். நெடுங்கிள்ளி ஆவூரில் நகருக்குள்ளிருந்து நாட்கழித்தது போலவே, உறையூரிலும் நாட்கடத்தினான். இத்தடவை கோவூர்கிழார் நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறவில்லை. நலங்கிள்ளிக்கே கூறினார்.

"இரும்பனை வெண்தோடு மிலைந்தோன் அல்லன்,
கடுஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்,
நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே! நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே!
ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே!" (புறம்45)

"நீங்கள் இருவரும் சோழர், ஆர் அல்லது ஆத்திமாலை அணிந்தவர்களே. எவர் தோற்றாலும் தோல்வியறியாச் சோழர் குடிக்குத்தான் இகழ் உண்டாகும்!" என்று கூறிப் புலவர் இருவரையும் நண்பராக்கினார்.

சங்க இலக்கியப் பாடல்களால் நெடுங்கிள்ளி - நலங்கிள்ளி தொடர்பின் வரலாறு நமக்கு இதுவரைதான் விவரமாகக் கிடைக்கிறது. ஆனால் புலவர் அருமுயற்சியால் ஏற்பட்ட நேசம் நீடித்திருந்ததாகத் தெரியவில்லை. இருவருமே மீண்டும் போர்களில் ஈடுபட்டனர். இப்போர்களில் ஒன்றே காரியாற்றுப் போர். இதே இடத்தில் பின்னும் போர்கள் நடந்ததால் இதை நாம் முதற் காரியாற்றுப் போர் எனலாம்.

காரியாற்றுப் போர் I

காரியாறு என்பது ஓர் ஆற்றுக்கும் ஓர் ஊருக்கும் பெயர் என்று தெரிகிறது. இது தமிழகத்தின் வட பகுதியில் திருவள்ளூரிலிருந்து காளத்திக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இவ்வூர் தற்போது இராமகிரி என்று வழங்கப்படுகிறது. இது தேவார காலங்களில் பாடல்பெற்ற பதிகங்களுள் ஒன்றாக இருந்தது. அதில் கோயில் கொண்ட இறைவன் பெயர் காரிக்கரை உடைய நாயனார் என்பது. ஊரின் பழைய பெயரை இது சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் இராமகிரி என்பது 'காரி மலை' என்ற தமிழின் இடைக்கால சமஸ்கிருத மொழிபெயர்ப்பேயாகும். காரி என்ற தமிழ்ச் சொல் கருமை நிறம் உடையது என்ற பொருளில் நஞ்சு, நஞ்சுண்ட சிவனார், நஞ்சுண்டு உடல் கரியவனான திருமால், கரு நிறமுடைய இரா-