உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தென்னாட்டுப் போர்க்களங்கள்

இத்தகைய போர்த் தோற்றத்தையுடைய சிறுவன் ஒருவன் தேர் மோட்டைப்பற்றி நிற்கிறானே, அவன் யாரோ?" என்று புலவர் அழகு நயம்படக் கேட்கிறார். சிறு பிள்ளையாயிருந்தாலும் போர் கண்டு அவன் சிறிதும் இமையாடவில்லை. அதே சமயம் அவன் வெற்றிகூட அவனிடம் பெருமையை உண்டு பண்ணவில்லை' என்றும் புலவர் குறிக்கிறார். 'மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் இலனே' என்ற சொற்கள் இந்நிலையைச் சித்திரிக்கின்றன.

"மெய்த் திருவந்துற்றபோதும் வெந்துயர் வந்துற்றபோதும்
ஒத்திருக்கும் உள்ளத்துரவோன்" (நளவெண்பா)

என்ற தருமனைப் பற்றிய புகழேந்தியார் வருணனையையே இவ்வடிகள் நினைவூட்ட வல்லன.

நெடுஞ்செழியன் படைகள் பெரியனவாயிருந்தாலும் ஏழு படைகள் திரண்ட எதிரியின் படைப்பெருங்கடலை நோக்க, அது மிகச் சிறிதாகவே யிருந்தது. எனவே போர்த் தொடக்கத்தில் எவரும் எதிரிகளின் வெற்றியையே எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் பாண்டியன் மதுரைவாயில் வெளியிலுள்ள பொய்கையில் குளித்துத் தாரும் கண்ணியும் படைக்கலங்களும் சூடிப் போர்க்களத்துக்கு வந்தசமயம், அவனுடனிருந்த இடைக்குன்றூர்க்கிழார் "எதிரிகள் எத்தனைபேர் பிழைப்பார்களோ” என்றே குறிக்கிறார்!

"மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி......
வெம்போர்ச் செழியனும் வந்தனன்- எதிர்ந்த
வம்ப மன்னரோ, பலரே!
எஞ்சுவர் கொல்லோ பகல், தவச் சிறிதே!" (புறம்79)

இளையன் என்று தன்னை ஏளனமாகக்கருதி, வெற்றி தமதே என்ற இறுமாப்புடன் படையெடுத்த எதிரிகளைக்கண்டு பாண்டியன் கடுஞ்சினம் கொண்டான். "அவர்களைச் சிதறடித்து அவர்கள் முரசங்களைக் கைக்கொள்வேன், கொள்ளாவிட்டால் நான் கொடுங்கோலனாகுக, புலவர் என்னைப் பாடா தொழிக, இரவலர்க்கு ஈயாத பண்புடையவனாகுக!" என்று வஞ்சினம் கூறுகிறான். இவ்வஞ்சினம் அவனே இயற்றிய ஒரு புறப் பாடலாக நமக்குக் காட்சி தருகிறது.

"நகுதக் கனரே நாடு மீக்கூறுநர்!
இளையன் இவன் என உளையக் கூறி......
சிறு சொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!......