உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தென்னாட்டுப் போர்க்களங்கள்

யெடுத்தான் என்றும், காஞ்சியில் விஷ்ணுகோபன் என்ற அரசன் அவனை எதிர்த்துத் திருப்பியோட்டினான் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணுகோபன் கி.பி.4-ம் றூற்றாண்டிலிருந்த ஒரு பல்லவனேயாகலாம் என்றும் வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். சிலர் சமுத்திரகுப்தன் அவ்வளவு தென்கோடி வரை வரவில்லை யென்றும், விஷ்ணுகோபன் முதலிய அரசர் கலிங்க நாட்டில் சென்றே போரிட்டனர் என்றும் சொல்கிறார்கள். அடுத்த குப்த அரசன் இரண்டாம் சந்திரகுப்தன் அல்லது விக்கிரமாதித்தன் விந்தியத்துக்கு வடக்கே வங்காளத்திலிருந்து கூர்ச்சரம்வரை இருகடலும் அளாவும் பேரரசு ஆண்டான். குப்த ஆட்சி சரிந்தபின் ஊணரை எதிர்த்து வெற்றி பெற்ற அரசன் ஹர்ஷனும் இதுபோலவே இருதிசைக் கடல் அளாவும் பேரரசை நாட்டி, தெற்கே தெற்கே சாளுக்கியரையும் வெல்லக் கனவு கண்டு கொண்டிருந்தார்.

சாளுக்கியருக்கு இங்ஙனம் வடக்கே ஹர்ஷனும் தெற்கே பல்லவரும் போட்டியாயினர். பல்லவருக்கோ வடக்கே சாளுக்கியரும் தெற்கே பாண்டியரும் போட்டியானார்கள். எனவே 7-ம் நூற்றாண்டு ஹர்வு–சாளுக்கியப்போட்டி, சாளுக்கிய பல்லவப்போட்டி, பல்லவ–பாண்டியப்போட்டி ஆகிய திசைப்போட்டிகளுக்கு ஆளாயிருந்தது.

சாளுக்கிய பல்லவப் போட்டி : புள்ளலூர்ப்போர்

பல்லவன் மகேந்திரவர்மன் கி.பி. 610-லிருந்து630 வரை ஆண்டான். அவன் தந்தை காலத்திலேயே பல்லவப் பேரரசு தொண்டை நாடு, சோழ நாடு ஆகியவற்றுடன் வடதிசையில் கோதாவரி கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையிலுள்ள வேங்கை (தற்காலக் கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர் அடங்கிய) நாட்டையும் வென்று உட்கொண்டு பரந்திருந்தது. இதே காலத்திய சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியும் கடம்பரையும் மற்றச் சிற்றரசர்களையும் வென்று பல்லவ எல்லை வரை தன் பேரரசைப் பரப்பி, பல்லவர் மீது பாயச் சமயம் பார்த்திருந்தான்.

பல்லவப் பேரரசுக்குத் தெற்கில் சிற்றரசரான சோழரும் பாண்டியப் பேரரசரும் இருந்தனர். அதன் மேற்கே கங்கர் வலிமைவாய்ந்த சிற்றரசராய் இருந்தனர். புலிகேசி முதலில் கங்க அரசனாகிய துர்வினீதனைத்தன்னுடன் சேர்த்துக்கொண்டு பல்லவப்பேரரசின் மீது படையெடுத்தான். சாளுக்கியர் தம் வெற்றிகளைப் பற்றியும் பல்லவர் தம் வெற்றிகளைப் பற்றியும் மட்டுமே குறித்துள்ளனர் என்று தோன்றுகிறது. இந்தப்