உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தென்னாட்டுப் போர்க்களங்கள்

தமிழர் தேசீயம், அண்மையிலேயே தன்னுரிமையும், தன்னாட்சியும் பெற்றுவரும் தமிழகம் இதில் முனைந்து முன்னேறும் பெரும் பொறுப்புடையது.

தமிழர் பழைய வாழ்வை உள்ளவாற்றிய விரும்புகிறவர்களுக்குத் தமிழ் இலக்கியம் பொதுவாக ஒரு திரையிட்ட பல கணியாய் உதவுகிறது. சங்க இலக்கியம் இத்திரையின் ஒளியார்ந்த பகுதியேயாகும். ஆனால் காணும் கண்ணொளிக்கு விளக்கமாகப் பழமை ஒளி வந்து திரையில் கூடும் பகுதி புற நானூறே எனலாம். அது தொடர்ச்சியுடைய ஒரே வீர காவியமல்ல. ஆனால் தமிழர் வீர காவியங்களுக்கெல்லாம் அதுவே தலையூற்று என்னலாம். தமிழர் வீர காவியங்கள் பலவற்றின் சிறு வண்ணப் படிவங்களின் தொகுதியாக அது விளங்குகிறது.

புறநானூற்றுக் காலத் தமிழகம்: இரு கருத்துரைகள்

தமிழ் வெறியர், தமிழ் பற்றார்வலர்களை மட்டுமன்றி, ஆறியமைந்த தமிழார்வமுடையவர்களைக்கூடத் தட்டி யெழுப்ப வல்லவை. புறநானூறு பற்றிக் காலஞ்சென்ற இராவ் பகதூர் எஸ். வையாபுரி அவர்கள் குறிப்பிட்ட இரண்டு கருத்துக்கள். புறநானூற்றுக்காலத் தமிழினமும் இக்காலத்தமிழினமும் பெயராலும் உடலாலும் ஒன்று; உயிராலும் பண்பாலும் வேறு என்று கருதுபவர் அவர். தமிழார்வலர் இன்று அவ்வாறு கருத முடியாது. பழந்தமிழினமும் இன்றைத் தமிழினமும் உயிராலும் பண்பாலும் ஒன்று; உடலாலும் சூழலாலுமே வேறுபட்டது என்றுதான் நாம் கருதும் ஆயினும் இந்நிலையிலும் இராவ்பகதூர் அவர்களின் கருத்துக்கள் புதுமை யுடையன. புத்துயிரும் புத்தூக்கமும் எழுப்புவன என்றே கொள்ளத்தக்கவை. அவற்றில் கருத்துச் செலுத்துவது பெரும் பயனுடையதாகும் என்பதில் ஐயமில்லை.

அவர் முதல்கருத்து வரலாற்று முக்கியத்துவம் உடையது. மொழியாராய்ச்சியாளரின் தனிப்பட்ட கவனத்திற்குரியது.

"முதலாவது நாம் கவனிக்கத்தக்கது, திராவிடமொழிகள் பலவும் புறநானூற்றுக்குப்பின், இவ்விரண்டாயிரம் ஆண்டுகளில் தோற்றியவைகளே. மலையாளம் சுமார் கி.பி.1200-ல் தமிழிலிருந்து கிளைத்தது. இதற்கு 4 அல்லது 5 நூற்றாண்டுகளுக்கு முன்னே கன்னடமும் தெலுங்கும் கிளைத்தன.