உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டுப் போர்க்களங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்ககாலப் போர்கள் -2

83

கங்கைப்போர் II அல்லது குயிலாலுவப் போர்

சேரன் செங்குட்டுவனின் இரண்டாவது வடதிசைப் படையெழுச்சி சிலப்பதிகாரத்திலேயே மிகவும் விரிவுபட உரைக்கப்பட்டுள்ளது. அப்படையெடுப்புக்கான இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று கண்ணகிக்குச் சிலை கொணர்வது, மற்றது வடதிசையரசர்களில் பால குமாரன் மக்களாகிய கனகனும் விசயனும் தமிழரசரை ஏளனமாகப் பேசியது. பின்னதன் பயனாக, சேரன் செங்குட்டுவன் ஒரு நெடு மொழி கூறிப் புறப்பட்டான். "இந்த வடபுல ஆரிய அரசரை முறியடித்து அவர்கள் தலைமீதே கண்ணகி சிலையை ஏற்றிக் கொண்டு வருவேன். அப்படிச் செய்யாவிட்டால், நான் செங்கோலரசனல்ல!" என்று அவன் சீற்றத்துடன் எழுந்தான்.

முதற் கங்கைப்போர்க் காலத்திலிருந்தே வடதிசையில் மகதப் பேரரசராக இருந்த நூற்றுவர் கன்னர் சேரன் செங்குட்டுவனுக்கு உற்ற நண்பராய், அவன் மேலாட்சியை ஏற்றிருந்தனர். சேரன் வடதிசைப் படையெடுப்புப்பற்றிக் கேள்விப்பட்டதும் அவர்கள் அவனை எதிர்கொண்டு வரவேற்கச் சஞ்சயன் என்ற படைத்தலைவனுடன் நூறு ஆடல் நங்கையர், இருநூற்றெட்டுப் பாடகர், நூறு கழைக்கூத்தாடிகள், நூறுதேர், பதினாயிரம்குதிரைகள், இருபதினாயிரம் வண்டிகள், அணிமணிப் பரிசுகள் அனுப்பியிருந்தனர். சேரன் அவர்களை ஏற்று, கங்கை கடக்க நாவாய்ப் படைகளைச் சித்தம் செய்து வைக்குமாறு அவர்களுக்கு ஆணை போக்கினான்.

கன்னர் உதவியுடன் சேரப் படைகள் கங்கை கடந்து, வட கரையிலுள்ள உத்தரை நாட்டையடைந்தனர். குயிலாலுவம் என்ற இடத்தில் கன்னன், விசயன் ஆகிய ஆரிய அரசர்கள் பெரும் படையுடன் தமிழ்ப்படையை வந்து எதிர்த்தனர். இக் கனக விசயர் தலைமையில் உத்தரன், விசித்திரன், உருத்திரன்,பைரவன், சித்திர சிங்கன், தனுத்தரன், சுவேதன் ஆகிய பல அரசர்கள் தங்கள் தங்கள் படைகளுடன் வந்து குழுமினர்.

கரையுடைத்த பெரு வெள்ளம் போன்ற ஆரிய அரசரின் படை வரிசைகளைக் கண்ட சேரன் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டான். விரைவில் முரசுகள் முழங்கின. சங்கங்கள் இயம்பின. காளங்கள் ஆர்ப்பரித்தன. வில் வீரர்களும், வேல் வீரர்களும் வாள் வீரர்களும் நீடித்து மும்முரமான போரில் ஈடுபட்டார்கள். அமர்க்களத்தின் ஆர்ப்பரிப்பும் அமலையும் காதுகளைச் செவிடுபட வைத்தன. குருதியும் குறையுறுப்புக்களும் பிணக்குவியல்களும் நிலத்தை மறைத்தன. தூசியும் கொடியும் கண்களுக்குத் திசைகளையே மறைக்கும் மறைதிரைகளாயின.