பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தியாகத்தில் வாழ்ந்து, தியாகத்தினால் உயர்ந்து, தியாகத்தையே உயிர்ப்பாகக் கொள்ளும் மனிதனே சிறப்புடையவன் ; அவனைச் சரித்திரம் வாழ்த்தும்; வாழவைக்கும்.

இத்தகைய மாண்புடைத் தலைவர் ஒருவர் தமிழ் மண்ணுக்குக் கிட்டியிருப்பதில், நன்றியுள்ள தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டுமல்லவா! தனக்கென வாழாது, பிறந்த பொன் நாட்டுக்கென அனைத்தையும் ‘சர்வபரித்தியாகம்’ செய்த தியாக சீலராயிற்றே நம் தலைமை அமைச்சர்!

“திரு காமராஜ் அவர்கள் கொள்கை வீரர். அவரது அடக்கமான தேசப்பணியும், அறிவாற்றல் மிக்க ஆட்சி முறையும், பொதுமக்கள் பால் அவர் கொண்டிருக்கக் கூடிய பாசம், அன்பு, இரக்கம் போன்ற குணச்சேகரமும் அவரை என்றென்றும் வாழ்த்தக் கடமைப்பட்டவை. அவர் தமிழகத்திற்கு மாத்திரம் சொந்தமானவரல்ல. இந்தியா பூராவுமே உரியவர்,” என்று அன்று நேருஜி புகழ்ந்தார். இன்று திரு. சாவன் பாட்நாயக் போன்ற பாரதத் தலைவர்கள் புகழ்கிறார்கள்.

அரசியல் உலகம் மிகவும் விந்தையானது: வேடிக்கையானது.

இன்று ஒருவரை உயர்த்துவார்கள்; நாளை தாழ்த்துவார்கள்.

ஆனால், கருத்து மாறுபாடு உடையவர்கள் ஒவ்வொருவரையும் அணுகி, காமராஜரைப்பற்றி அபிப்பிராயம் கேட்டால், “ஆஹா! அவர் பெருந் தியாகியல்லவா? அல்லும் பகலும் பாரதத்துக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அவரைப் போல. கவலைப்படு பவர்கள் அவரைத் தவிர வேறு யார் இருக்கமுடியும்?” என்றுதான் சொல்வார்கள் அவ்வாறுதான் சொல்ல முடியும்!