பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரண்டாவது டாக்டர்

இங்கிலாந்து நாட்டின் அரசியார் எலிசபெத் அவர்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அண்மையில் கடிதமொன்றை அனுப்பினார், ருஷ்ய நாட்டின் தலைமை அமைச்சர் குருச்சாவ் அவர்களும், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் திரு கென்னடியும் தனித் தனியே டாக்டருக்குக் கடிதங்கள் எழுதினார்கள், உலகத்தின் வல்லரசுச் சக்திகளிடமிருந்தெல்லாம் ஒரே சமயத்தில் அறிஞர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கடிதங்கள் வருவதென்றால், இந்நிகழ்ச்சி பெருமைக்குரிய செயலே அல்லவா? இத்தகைய பெருமைக்குரிய செயல் மூலம் தாங்கள் உயர்ந்து, உலக மேடையில் உயர்ந்து நிற்கும் தத்துவஞானியை மேலும் உயர்த்திப் பாராட்டிப் புகழ்ந்துரைத்து வாழ்த்துச் செய்திகள் அனுப்பிவைத்தார்கள் உலகத் தலைவர்கள்.

ஆம்; இப்படிப்பட்ட மங்களகரமான மங்கல ஒலிகளுக்கு மத்தியில் தான், நாம் நம்முடைய தெய்வத் தமிழகத்தினைச் சார்ந்த இராதா கிருஷ்ணன் அவர்களை இந்தியத் துணைக்கண்டத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பெறும் பேறு பெற்றிருக்கின்றோம், தமிழ் நாட்டின் பெருமையை உலகமெனும் கலங்கரை வழியே திக்கெட்டும் பரப்பும் வகையில், இதோ, இந்த இரண்டாவது டாக்டர் நமக்குக் கிடைத்திருக்கிறார்!

சரித்திரத்தை மனிதன் எழுதுகிறான்.

அதேபோல, மனிதனைச் சரித்திரம் எழுதுகிறது.