பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

மெய்ஞ்ஞானத்தின் இலட்சனம் என்ன வென்றால், தன்னல மின்மையும் நாணயமுமே!” - அறிவாளி ரஸ்கினின் குறிக்கோள் இன்று செயற்பட்டு விட்டது. மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பெறவேண்டியவர், வரி முதலியன கழித்து ரூ 1,900 தான் பெறத் தீர்மானித்திருக்கிறார், ஜன நாயக நாட்டின் முதல்வர் என்றால், அவரே மக்களின் சார்பாளர் வரிசையிலும் முதல்வர் அல்லவா? இவ்வகையிலும், அவரது கடமை நாட்டம் புலனாகிறது. காட்சிக்கு எளியவராக நின்று, பொதுமக்களுடன் நேரிடைத் தொடர்பு கொள்ளும் வகையில் பேட்டிக்கான வழிவகைகளையும் வகுத்துள்ளார். சென்ற வாரத்தில் குடியரசு மாளிகையில் மூவாயிரம், நாலாயிரம் பேர் தலைவரைக் கண்டு பேசியிருக்கின்றனர்! “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின், வாக்கினிலே ஒளியுண்டாகும்.” என்கிற பாரதி வாக்கை மெய்ப்படுத்த இதைவிட வேறென்ன திருட்டாந்தம் வேண்டும்?

“தலைசிறந்த அரசியல் மேதையும், பண்பாட்டுத் தலைவருமான தாங்கள் இந்தியக் குடியரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அறிந்து பெருமகிழ்வு அடைகிறேன், நாட்டின் சேவையில் வாழ்நாள் முழுவதையும் ஈடுபடுத்தியிருக்கும் தங்களுக்கு இந்த உயர்ந்த பதவி கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமானது ஆகும்,” என்று திரு கென்னடியின் வாழ்த்துத் தந்தி கூறுகிறது.

குடியரசுத்தலைவருக்குத் துணை நிற்க டாக்டர் ஜாகிர் உசையின் அவர்கள் கிடைத்திருக்கிறார். அனுபவ வழிகளில் அன்பைத் துணைகொண்டு வாழ்வின் தடத்தில் நடந்து முன்னேறிய மக்கள் தலைவர் அவர். மனிதர்கள் யாவரும் ஒரே சகோதரத்வ சமுதாயத்தினரே!” என்னும் ‘திருக்குர் ஆன்’ வாசகத்துக்கு இணங்கும் வண்ணம், துணைத் தலைவரின் பதவி கைகூடி வந்திருக்கிறது.