பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழே போதனா மொழி

அகில உலகப் பேரொளியாக விளங்கிய காந்தியடிகள், தம் ஆயுட் காலத்தில் மணிமணியான பொன் மொழிகள் பலவற்றை அவ்வப்போது பொதுமக்கள் முன்னே வைத்திருக்கின்றார், அவை எக்காலத்துக்கும் ஏற்ப அமைந்த பொற்புக் கொண்டவை. தாய்மொழியின் வல்லமை குறித்தும், அன்னைமொழியின் இன்றியமையாத் தன்மை பற்றியும் ஒரு திட்டவட்டமான முடிவை அவை எடுத்துக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டு வாசகங்களை இப்போது நாம் மீண்டும் எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணல் காந்திஜி கூறுகின்றார்.

“சத்தியத்தையும் அஹிம்சையும் பலி கொடுத்து விட்டு, அதனால் வரும் சுயராஜ்யத்தை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்ள மாட்டேனோ, அதுபோல, தாய் மொழியை அலட்சியப் படுத்திக்கொண்டு வரக்கூடிய எல்விதமான அரசாட்சியையும் நான் ஏற்க மாட்டேன்.
“கல்வி புகட்டுவதில், நமது தாய்மொழியை உபயோகிக்கக் கூடாது என்று விலக்கி வைத்தல் மிகவும் கேடான செயல் முறையாகும்.
“அந்தந்த நாட்டு மக்களுக்கு உயர்பண்பு நலன்களைப் போதிக்க, அந்தந்த நாட்டுப் பிரதேச மொழிகளே உயர்வுமிக்க சாதனமாக அமைய வேண்டும் என்பதே என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும்!”

அறவழித் தந்தையின் தாய்மொழிப் பேச்சு அந்தந்த நாட்டுக்கு - அந்தந்தக் காலத்துக்குச் சாலப் பொருந்தும்.