பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அவர் பேசுகையில், “அகில இந்தியக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, மத்திய நிருவாக மொழியாக ஹிந்தியும் ஆங்கிலமும் இயங்க வேண்டியவையாகின்றன. ஆனால், ஹிந்தி மொழிக்கு நம் நாட்டில் ஆதரவு கிடையாது. ஆகவே, அவ்விடத்தில் ஆங்கிலம் இடம் காணுவது அவசியமாகிறது. ஆதலால், கீழ்மட்டத்தில் நான்காவது வகுப்பிலேயே ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட வேண்டும்!” என்று அவர் மேலும் தொடரலானார். கல்வி அமைச்சரின் இக் கருத்து மட்டும் பலரது ஐயுறவுக்கு அடித்தளமானது. உயர் மட்டத்தில் தமிழுக்கும் அடி, மட்டத்தில் ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதானது நாட்டு மக்களிடையே ஒரு குழப்ப நிலையை மட்டுமல்லாமல், குழப்பமான மனப்போக்கையும் உண்டாக்குமென்று தலைவர் திரு ம. பொ. சி. அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

கல்வி அமைச்சர் இதுபற்றிச் சிந்தித்து முடிவெடுத்தல் அவசியம் என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியவர்களாக ஆகின்றோம்.

கோவைக் கல்லூரியில் தமிழ்பாட நூல் வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. அப்போது உரை ஆற்றிய தமிழக முதலமைச்சர், பல்கலைக் கழகப் போதனாமொழி பற்றிய மாநில ஆட்சியின் முடிவு இறுதியானதும் உறுதியானதுமாகும் என்று சொன்னார்கள்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இணைந்துள்ள மாநிலங்கள் மொழி வழியே பிரிக்கப்பட்டு இயங்கி வருவதால், அந்தந்த வட்டார மொழிகளே மாநில ஆட்சி மொழியாகவும், போதனா மொழியாகவும் விளங்க வேண்டுமென்பதே அரசியல் தத்துவமாகும். இத்தத்துவத்தை உணர்ந்து கொண்டு செயல் வடிவு கொடுக்க எத்தனை தடைகள்? எவ்வளவு கால தாமதம்? எத்தனை போராட்டங்கள்!