பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குருதேவருக்கு அஞ்சலி

“ஜபமாலை உருட்டுவதை விட்டு விடு; மந்திரமும் தந்திரமும், ஆடலும் பாடலும் ஆண்டவனைக் காட்ட மாட்டா!

தாளிட்டு அடைபட்ட கோயிலின் இருளடைந்த மூலையில் யாரைப் பூசிக்கின்றாய்? கண்களைத் திறந்து, உன் ஆண்டவன் உன் எதிரே இல்லை என்பதை உணர்ந்து கொள்!

கடினமான தரையில் ஏர்கட்டி உழுவோரிடமும், சாலை அமைத்திட சரளைக்கல் உடைப்போரிடமுமே தெய்வம் இருக்கிறது; அவர்களுடன் ‘அவன்’ மழையில் நனைகிறான்; வெயிலில் உலர்கிறான்; அவன் ஆடையில் தூசி படிந்திருக்கிறது. உன் காஷாயத்தைக் களைந்தெறி; கடவுளைப் போல நீயும் புழுதியில் இறங்கி வா!

பூவையும் நறும்புகையையும் ஒதுக்கிவிட்டு வெளியே வா! உன் ஆடை கிழிந்து, அழுக்கடைந்தால், என்ன? நெற்றி வேர்வை நிலத்தில் சொட்ட உழை, நீ உன் ஈசனைக் கண்டிடுவாய்!...”

காலத்தைக் கடந்து நின்று ஒலி கொடுக்கிறது இந்தத் தெய்வீகக் குரல். இதுவே காலத்தால் நிலை பெற்றுவிட்ட ஞானயோகியின் தீர்க்க திருஷ்டி வாக்காகவும் அமைந்து விடுகிறது. மனிதனைப் படைத்த ஆண்டவனுக்கும், ஆண்டவனைப் படைத்திடும் மனிதனுக்கும் இடையே புகுந்து ஒலிபரப்பும் இத்தகைய புரட்சிக் குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாராக இருக்கமுடியும்,