பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தென்னைமரத் தீவினிலே...

பிடிவாதமாக அவள் கையில் திணித்து அனுப்பினேன். என்ன செய்வது, எங்களைப் பார்க்க வந்ததற்காக இந்தத் தண்டனையா அவளுக்கு கடவுளே!” என்று கதறினார்.

அனைத்தையும் கனவு போல் கேட்டுக் கொண்டிருந்த லட்சுமி அம்மாளுக்கு, “சற்று முன் படுக்கப் போகும் போது, இனி இந்தப் பெண்ணிற்கு எல்லாம் விடிஞ்சு போச்சு என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே படுத்தேனே, வள்ளி உனக்கு விடிவு இந்த உருவிலா வர வேண்டும்? அதிர்ஷ்டமே இல்லாமல் நீ என்ன வரம் தான் வாங்கிக் கொண்டு வந்தாயோ,” என்று புலம்பினாள்.

இந்த ஐநூறு ரூபாயை விஜயனிடம் கொடு. இது வள்ளியினுடைய பணம்தான். காலையில் அவளது காரியங்களுக்கு அவளது பணமே உதவட்டும். காலையில் நாங்கள் சீக்கிரமாகவே வந்துவிடுவோம் என்றார் பரமகுரு.

“சரி ஐயா! நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்,” என்று புறப்படத்தயாரான குமரேசனை மாமாவின் காரிலேயே ஏற்றி விஜயன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பரமகுரு.

குமரேசனை அனுப்பிவிட்டு அன்று முழுவதும் லட்சுமி அம்மாளும், பரமகுருவும் “இனிமேல் என்ன செய்வது?” என்று யோசித்துக் கொண்டே இருந்தனர்.