உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



60

தென்னைமரத் தீவினிலே...

நேரிடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டான். பாபு அவனைப் பிடிவாதமாக அழைத்தும் அருணகிரிக்கும் உள்ளூர அவர்களுடன் போக வேண்டுமென்கிற ஆசை இருந்ததை அவனது கண்கள் கூறின.

இல்லாவிட்டால் யார் கூப்பிட்டாலும் இப்படி என் மகனை அனுப்ப மாட்டேன். அவனும் தராதரம் தெரியாமல் போக ஆசைப்பட மாட்டான்.

எல்லாவற்றையும்விட அருணகிரியை அவர்களுடன் அனுப்பி விட்டதற்காக அவர் என்னிடம் எவ்வளவு கோபித்துக் கொள்ளப் போகிறாரே; அவரை நான் எப்படி சமாதானம் செய்யப் போகிறேனோ தெரியவில்லை!

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட வள்ளியம்மை இப்படி வழி முழுவதும் பலவிதமாகச் சிந்தித்துக் கொண்டே வேகமாக நடந்தாள்.

குறுக்கு வழியில் அத்தனை வேகமாகச் சென்றும் நாலரை மணிக்குப் பட்டித் துறையிலிருத்து புறப்படும் பஸ் அவள் வந்து சேர்வதற்குள் புறப்பட்டுப் போய்விட்டது. வள்ளியம்மைக்கு ஏமாற்றமாகி விட்டது.

அடுத்த பஸ்ஸிற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆறு மணிக்குத் தான் அடுத்த பஸ் வரும். ‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தவள் ஒரு முடிவிற்கு வந்தாள்.