பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

95

இப்படியும் அப்படியும் புரட்டினான். இதற்குள், கனகசபை தங்கமணியின் முதுகில் தட்டி, சில முதல் உதவிகளை செய்ததில், தங்கமணி குடித்த தண்ணீர் வாய் வழியாக வெளியே வந்தது.

பயந்து பதறியபடி லட்சுமி அம்மாள் முருகன் விபூதி பிரசாதத்தை எடுத்து தங்கமணியின் நெற்றியில் பூசி, “முருகா குழந்தையைக் காப்பாற்று! நல்லபடியாக நாங்கள் ஊர் போய்ச் சேர நீதான் எங்களுக்குத் துணை” என்று கண்ணீருடன் பிரார்த்தனை செய்தாள்.

சிறிது நேரத்தில் தங்கமணி கண்விழித்து எல்லாரையும் பார்த்தாள்.

“நல்லவேளை எங்கள் வயிற்றில் பால் வார்த்தாய் தங்கமணி கண்ணு,” என்று கல்யாணி அழுதாள்.

“ஒன்றுமில்லை, கவலைப்பட வேண்டாம். குளத்தில் கொஞ்சம் ஆழம் அதிகம் இருப்பதால் ஒருவாய் தண்ணீர் குடித்து விட்டாள் நல்ல சமயத்தில் முருகன், அருணகிரி உருவில் வந்து காப்பாற்றி விட்டான். நாம் எல்லோரும் அருணகிரிக்கு தான் நன்றி சொல்லவேண்டும்” என்ற கனகசபையின் வாய் திரும்பத் திரும்ப, ‘முருகா’ என்று முணு முணுத்துக் கொண்டிருந்தது.

அனைவரும், “அருணகிரியால்தான் தங்க மணி இந்த கண்டத்திலிருந்து தப்பினாள்,” என்று அவனை புகழ்ந்து கொண்டிருந்தனர்.