பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

என்று நினைத்தபோது சுத்தோதன மாமன்னருக்கு சிந்தை குழம்பியது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அவர் மனத்தைக் கலக்கியது. அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கானகம் செல்லாமல் சித்தார்த்தனைத் தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொண்டு என்ன செய்யலாமென்று சிந்தித்துத் திட்டங்கள் வகுத்தார்.

கவலையே தெரியாமல் வளர்த்தால் இளவரசனுக்குக் கானக நாட்டம் எழாது என்று முடிவு கட்டினார். உலகில் உள்ள கவலைகள் ஒன்றுகூட அவனுக்கு ஏற்படக்கூடாது. மனிதர்களாலும் விலங்குகளாலும் ஏற்படுகின்ற துன்பம் மட்டுமல்லாமல் காலத்தால் ஏற்படுகின்ற கவலைகளும்கூட சித்தார்த்தனை அணுகக் கூடாது என்று அவர் முடிவு செய்தார்.

வெயிலின் கடுமையோ பனியின் கொடுமையோ மழையின் குளுமையோ சித்தார்த்தன் உடலைத் தீண்டித் தொல்லை கொடுக்கக் கூடாது என்று அவர் முடிவு செய்தார்.

உடனே அவர் தம் அரண்மனையை அடுத்தாற்போல் மூன்று மாளிகைகள் கட்ட ஏற்பாடு செய்தார்.