பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

இன்பநிலை கண்ட புத்தபிரான்

ஆடாமல் அசையாமல் அந்த மரத்தடியிலேயே உட்கார்ந்திருந்திருந்தான். இடையிடையே மனம் என்னும் குரங்கு பல இடையூறுகளைச் செய்தது. என்னென்னவோ எண்ணங்களையெல்லாம் அந்த மனக் குரங்கு பற்றித் தாவியது. ஆனால் சித்தார்த்தன் அதை அடக்கி ஆண்டான். உண்மையை அறியும் வரை வேறு எந்த நினைப்பு வந்தாலும் அதை அடக்கி நிற்பதென்ற உறுதியோடு அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்தான். அவனுடைய உறுதி மனக்குரங்கைக் கட்டிப் போட்டது. எப்படி அவனுடைய உடல் அசையாமல் உட்கார்ந்திருந்ததோ அப்படியே அவனுடைய உள்ளமும் அசையாத நிலையையடைந்தது. அவன் நெஞ்சில் அப்போது நிலைத்திருந்தது ஒரே நினைப்புத்தான். உலகம் துன்பங்களிலிருந்து விடுதலை யாவது எப்படி? என்று அறியும் ஆசை ஒன்றைத் தவிர வேறு விருப்பம் அவனுக்குக் கிடையாது.

இரவு நேரத்திலே திடீரென்று அவன் உள்ளத்திலே ஓர் ஒளி பிறந்தது. ஆண்டுக் கணக்காக அவன் கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ஆம்! அவன் தேடிய உண்மை புலப்படவும் அவன்