பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது 1973 ஜூலையில் ஒருநாள். கவிஞர் செம்மல் அவர்களை முதன் முறையாக நான் சந்தித்த நாள். காரைக்காலுக்கு வடக்காக ஒரு இரண்டுகிலோ மீட்டர் தொலைவில் தளத்தெரு ஒரு சிற்றுார். காந்தி படிப்பகம் என்ற ஒரு பழைய நூலகமும், ஒரு தொடக்கப் பள்ளிக்கூடமும், மாரியம்மன் கோயிலும் ஒரு சிவன் கோயிலும் தாண்டி சற்று தொலைவில் செம்மல் வீட்டிற்கு வழிகாட்டப்பட்டது. பம்பர விளையாட்டு மும்முரத்தில் இருந்த சிறுவர்களைக் கடந்து சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு, வாசலில் நாயகி நிழல்' என பொறிக்கப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் பெயர்ப்பலகையைப் பார்த்து கொண்டே கதவைத் தட்டினேன். நடுத்தர வயதில் வெளியே வந்த அந்தப் பெண்மணியிடம் 'அம்மா! கவிஞர் செம்மலைப் பார்க்கனும்!” என்றேன். - பழைய தஞ்சாவூர் பாணியில் கட்டப்பட்டிருந்த அந்த அழகிய ஒட்டு வீட்டிற்குள் என்னை அழைத்துச் சென்றார். முற்றமும் ஊஞ்சல் கூடமும் தாண்டி "இங்க தான் வாங்க!” என்று ஒரு அறைக்குள் என்னை அழைத்துச் சென்றார்கள் அந்த அம்மா. - - உங்களைப் பாக்க வந்திருக்காங்க" - என்று அறிமுகப்படுத்திவிட்டு சமையல் கட்டு நோக்கி விரைந்தார். அம்மா (அவர்தான் வைதேகி அம்மாள். செம்மலின் மன்ைவி. கவிஞர், எழுத்தாளர், இயக்குநர் எஸ். ராஜகுமாரனின் தாயார்) . “வாங்க! சுரேசாவா!' என்று என்னை வரவேற்றார் செம்மல். தாகூரை ஒத்த வெள்ளைத் தாடியுடன், அமைதியாய், பரபரப்பு ஏதுமில்லாமல் இயல்பாகத் தவம் கலைந்த ஒரு யோகியாகத் தோற்றமளித்தார். அறிமுக உரையாடல்களுக்கிடையே தேனீர் வந்தது. அதன் பிறகு, நான்குமணி நேரங்கள் நழுவியது தெரியாமல் பேச்சுசுவைபரக்க நகர்ந்தது.