பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன்பிறகு செம்மலுக்கும் எனக்கும் இடையில் இலக்கிய நட்பு உறவாய் தொடர்ந்தது. அந்த ஆலமரத்தில் காலத்தை மீறிய பல புதிய விதைகளைக் கண்டு நான் அதிசயத்திருக்கிறேன். சினிமா, இலக்கியம், சமுதாயம் பற்றிய பார்வை எல்லாமே அவரிடம் புதிதாகவும் கூர்மையாகவும் சிலிர்த்தெழுந்தன. பாரதியின் ரெளத்ரம் அவரின் எண்ணங்களில் கொந்தளிப்பதை நான் பார்த்திருக்கிறேன். எனது படைப்புகள் இன்னும் இருபத்தைந்து ஆண்டு கழித்துதான் பேசப்படும்! என்பார். என்ன ஆச்சர்யம்! அந்த மகாகவியின் வாக்கு அப்படியே பலித்திருக்கிறது. செம்மலின் விதைபற்றி, ஜனித்து இன்று விருட்சமாய் வளரத் தொடங்கியிருக்கும் எஸ். ராஜகுமாரனின் முயற்சியால், அவருடைய முதல் கவிதைக் கனவு இன்று நூலாகியிருக்கிறது. தந்தையின் விழிகண்ட கனவு, தமயனால் அரங்கேற்றம் காண்கிறது. இது காலத்தின் கொடுரமா? இல்லை அற்புத ரசமாற்றமா... - அணிந்துரையில் விமர்சகர் இந்திரன் குறிப்பிட்டதுபோல் திராவிட இயக்க இலக்கியக் களத்தில் உருவானாலும், அந்தத் தமிழியக்கச் சிந்தனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர், முற்றிலும் புதிதானவர் செம்மல் (வயலூர் சண்முகம்) என்பதற்கு இந்த சிறு கவிதைத் தொகுப்பு பெரிய ஆதார ஆவணம் என்ற மிகையற்ற உண்மையை, தமிழிலக்கிய உலகம் அறிந்து போற்றும் என்பது எனது நம்பிக்கை: யுக சிற்பி (சுவாமி ஜீவன் ப்ரமோத்) 'தியானபூமி’ 83, காமராசள் சாலை காரைக்கால் - 609 602,